கோவையில் பெற்ற தாயை அசிங்கமாக பேசிய சப் இன்ஸ்பெக்டரை அவரது மகன் சட்டையை பிடித்து சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் அம்மாவையே அப்படி பேசுறியா? சப் இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து எகிறிய சிறுவன்..! ஆனால்? கோவை சம்பவம்!
கோவையில் ரத்தினபுரி சாஸ்திரி வீதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் வேலுமயில் என்பவர் தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவியும் அவருடன் ஒத்தாசையாக வேலை செய்து வருகிறார். மேலும் அவருடைய மகனும் பள்ளிக்கூட விடுமுறையை முன்னிட்டு பெற்றோருடன் உதவியாக இருந்து வருகிறார். சம்பவ தினத்தன்று வேலு மயில் நடத்திவரும் தள்ளுவண்டி உணவுக் கடையில் 8:00 மணி வாக்கில் பல பேர் நின்று கொண்டு உணவு அருந்தி உள்ளனர். அப்பொழுது அந்த வழியாக சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி என்பவர் ரோந்து பணி பார்த்து வந்துள்ளார்.
அப்பொழுது தள்ளுவண்டி கடையில் கூட்டம் கூட்டமாக பல பேர் நின்று உணவு அருந்துவதை பார்த்து அவர்களிடம் விசாரித்து இருக்கிறார். இப்படி கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு உணவு சாப்பிட்டால் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். மேலும் 9 மணிக்கு தானே கடையை திறக்க வேண்டும் ஆனால் 8 மணிக்கு கடையை திறந்து விட்டீர்களே என்று கடையின் உரிமையாளரை கேள்வி எழுப்பி இருக்கிறார். உணவை விட உயிர் தான் முக்கியம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட வேலு மயிலின் மனைவி உயிர் வாழ்வதற்கு உணவும் அவசியம்தானே என்று வாதிட்டு இருக்கிறார். இப்படியே இருவருக்குமிடையே வாக்குவாதம் நீடித்துள்ளது.
இந்த நேரத்தில் வேலு மயிலின் மகன், தன்னிடமிருந்த செல்போனில் தனது அம்மாவை போலீசார் வசைபாடியதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அதை கவனித்துவிட்ட சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு சிறுவனிடம் கூறியிருக்கிறார். உடனே அந்த சிறுவன் டெலிட் செய்து விட்டதாக சப் இன்ஸ்பெக்டரிடம் கூறியிருக்கிறார். இருப்பினும் சந்தேகத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் அந்த சிறுவன் கையில் இருந்த செல்போனை வாங்கி பார்த்துள்ளார் அப்பொழுது சப்-இன்ஸ்பெக்டர் அவரது தாயாரை திட்டியது பற்றிய வீடியோ பதிவு இருந்துள்ளது. உடனே அதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் செல்போனை எடுத்துக்கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறி இருக்கிறார். செல்போனை வந்து காவல் நிலையத்தில் பெற்றுக்கொள் என்று சிறுவனிடம் கூறியிருக்கிறார். உடனே அதற்கு அந்த சிறுவன் சப்-இன்ஸ்பெக்டர் ஏறி அமர்ந்த வண்டியின் சாவியை எடுத்து இருக்கிறான். சாவியை வண்டியிலிருந்து எடுத்தவுடன் சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்து விழுந்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுவனிடம் இருந்து சாவியை வாங்க முயற்சித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த சிறுவன் ஒரு கட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் என்றும் பாராமல் அவரது சட்டையைப் பிடித்து விட்டான். இதனால் உடனே கோபத்திற்கு உள்ளான சப் இன்ஸ்பெக்டர் அந்த வாகனத்தை அழைத்து அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறுவனை விசாரித்த பொழுது அவர் நன்றாக படிக்கும் மாணவன் என்றும் தன்னுடைய தாயை தவறாகப் பேசியதால் தான் எனக்கு கோபம் ஏற்பட்டு சப் இன்ஸ்பெக்டரின் சட்டையைப் பிடித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து சிறுவனை எச்சரித்து காவல்துறை அதிகாரிகள் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.