விவேக்கிற்கு பெண் குழந்தை... பரோலில் வருகிறார் சசிகலா... திகிலில் தினகரன்

இளவரசியின் மகனுக்கு ஜெயா டி.வி.யின் நிர்வாகியுமான விவேக் _ கீர்த்தனா தம்பதியருக்கு இன்று (பிப்ரவரி 9ம் தேதி) காலை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்தக் குழந்தையைப் பார்க்க சசிகலா வரப்போகிறார் என்பதுதான் அ.ம.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பு.


ஜெயலலிதாவின் உண்மையான வளர்ப்பு மகன் என்றால், அது விவேக்தான். இவர் சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன். இவர் கைக்குழந்தையாக இருந்தபோது தந்தையை இழந்தவர் என்பதால் ஜெயலலிதாவே மிகவும் அன்புடன் வளர்த்துவந்தார். அவரை நன்றாக படிக்க வைத்ததும், பெரிய பதவியில் அமர்த்தி அழகு பார்த்ததும் ஜெயலலிதாதான்.

விவேக்கிற்கும் கீர்த்தனாவுக்கும் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்ததும் ஜெயலலிதாதான். ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட பல்வேறு பிரச்னை காரணமாக விவேக் திருமணத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை. அதன்பிறகு ஏராளமான குளறுபடிகள். சசிகலாவுடன் சண்டை என்றாலும் ஒருபோதும் விவேக்கை ஜெயலலிதா வெறுத்ததில்லை என்கிறார்கள்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா சிறைக்குச் சென்ற நேரத்தில், தன்னுடைய ஒட்டுமொத்த சொத்துக்களையும் விவேக் கட்டுப்பாட்டில்தான் கொடுத்துவிட்டுப் போனார். தினகரனுக்கு மிடாஸ் மட்டுமே நிர்வாகத்தைக் கொடுத்தார். ஜெயா டி.வி. நிர்வாகத்துக்காக தினகரன் எவ்வளவோ போராடியும் சசிகலா கொடுக்கவில்லை.

இந்த நிலையில் திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் கழித்து கீர்த்தனா கர்ப்பம் அடைந்தார். அவரது வளைகாப்புக்குத்தான் இளவரசி சிறையில் இருந்து சிகிச்சையைக் காரணம் காட்டி வெளியே வந்தார். அவர்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என்று சசிகலா ஆருடம் சொல்லிவந்தாராம். அந்த ஆருடம் பலித்திருக்கிறது. சசிகலா சொன்னதுபோலவே பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 

அதனால் குழந்தையைப் பார்ப்பதற்காக விரைவில் சசிகலா பரோலில் வருகிறார் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே கண் வலி, கழுத்துவலி, முதுகுவலியால் கடுமையாக சசிகலா அவஸ்தைப்பட்டு வருகிறார். இதற்கான சிகிச்சையைக் காரணம் காட்டி 15 நாட்கள் பரோலுக்கு அப்ளை செய்ய இருக்கிறாராம்.

ஆனால், இப்போது சசிகலா வெளியே வருவதை தினகரன் விரும்பவில்லை என்கிறார்கள். இப்போது சசிகலா வெளியே வந்தால், அ.தி.மு.க.வுடன் இணைப்புக்கு வலியுறுத்துவார் என்பதால்  தடா போடுகிறாராம். அ.ம.மு.க.வில் சில பஞ்சாயத்துகளும் இருப்பதால் சிக்கல் ஏற்படும் என்று நினைக்கிறார் தினகரன். என்ன செய்யப்போகிறார் சசிகலா என்பது விரைவில் தெரிந்துவிடும்.