சிறைக்குள் பிரியாணி! விரும்பிய போது ஷாப்பிங்! சசிகலா விடுதலையாவதில் சிக்கல்!

சசிகலா இருந்த சிறையில் அதிரடி ரெய்டு நடத்திய ரூபா கிளப்பிய அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை என்று கூறியிருக்கிறது, விசாரணை அறிக்கை. இதனையடுத்து சசிகலா மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதுதான் கேள்விக்குறி.


ஜெயலலிதாவுடன் சேர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் இப்போது சசிகலா,  இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திடீரென சசிகலா ஷாப்பிங் போனதாக சில படங்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து சிறையில் சசிகலாவுக்கு முறைகேடாக சலுகைகள் அளிப்பதற்காக மேலிடம் வரையிலும் கோடிகளில் பணம் செலவழிக்கப்பட்டு இருப்பதாக சிறைத் துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரூபா இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் ரூபாவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் சிறையில் சுறுசுறுப்பாக ஆய்வு மேற்கொண்டு, அறிக்கையை கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பித்துவிட்டது.

அதை ஏற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோதும், அறிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதனால் உடனே இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தில் சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பிய நிலையில்,  அந்த அறிக்கை விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.  

அதில் சசிகலாவுக்கும். இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மேலும், சசிகலா சிறையில் சமைத்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. சசிகலாவுக்கு என்று பிரத்யேகமாக சமையல் செய்து தருவதற்கு பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டதும் உறுதி செய்யப்ப்பட்டுள்ளது. ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் விதிகள் மீறப்பட்டுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

   பெண்கள் சிறை என்பதை மீறி சில பார்வையாளர்கள், சசிகலா சிறை வரையிலும் சென்று வந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் பெரிதாகும் பட்சத்தில் சசிகலா நன்னடத்தை மூலம் முன்கூட்டியே வெளியேவரும் வாய்ப்பு பறிபோகும் என்பதுடன் கூடுதல் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர, இப்போது அனுபவித்து வரும் சில சலுகைகளும் பறிபோகலாம். ஆக, சசிகலாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்தான்.