பணமதிப்பிழப்பு நோட்டுகளை வைத்தே சொத்துக்கள் குவித்த சசி ! ஐ.டி. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 2016ம் ஆண்டு மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்து சசிகலா சொத்துக்களை வாங்கி குவித்து வைத்தள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தது. பொதுமக்கள் வைத்திருக்கும் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து 2,000 ரூபாயாக மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதனால் பல தொழிலதிபர்கள், வரி ஏய்ப்பு செய்தவர்கள் சிக்கினர்.

இந்நிலையில் சசிகலா மற்று உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித்துறை 2017ம் ஆண்டு சோதனை நடத்தியது. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது வருமானவரித்துறை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சசிகலா,

தனக்கு எதிரான சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என கேட்டார். ஆனால் வருமானவரித்துறையோ மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதால் சசிகலாவின் இந்த மனு செல்லாது என தெரிவித்தனர். இதையடுத்து சசிகலாவின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையே சோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள வருமானவரிதுதுறை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட ரூபாய் 500- 1000 நோட்டுகளை கொண்டு ஷாப்பிங் மால்களை சகிகலா வாங்கியதாக தெரிவித்துள்ளது.

அதாவது, நவம்பர் 8, 2016-க்குப் பிறகு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி ஒரு ரிசார்ட் இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கியதாகவும், இவைகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை எனவும் தெரிவித்துள்ளது வருமானவரித்துறை.