கனிமொழியை தோற்கடிக்க இரட்டை இலையில் சரத்குமார் – 20 கோடி பேரம்?

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் துடிக்கும் கனிமொழியை தோற்கடிப்பதற்காக சரத்குமாரை களம் இறக்குகிறது அ.தி.மு.க. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்.


கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி. பதவி வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் தருவதற்கு ஸ்டாலின் தயாராக இல்லை. அதனால் தூத்துக்குடி தொகுதியில் நின்று ஜெயித்து மக்களவைக்குச் செல்ல கனிமொழி ஆசைப்படுகிறார். அதற்காகத்தான் தன்னுடைய எம்.பி. நிதியை அதிக அளவில் தூத்துக்குடியில் செலவு செய்தார்.

இதுதவிர, தூத்துக்குடியில் இப்போதே ஒரு அலுவலகம் தொடங்கி, சில நபர்களை நியமனம் செய்து கிராமம் கிராமமாகச் சென்று தி.மு.க. நிர்வாகிகளைப் பேசி வளைப்பதற்கு ஏற்பாடுகள் செய்துவருகிறார். இந்தத் தேர்தலில் வென்று காட்டுவதில்தான் தன்னுடைய அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறார். இதற்கு ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் ஜரூராக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கனிமொழிக்கு ஆதரவாக கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றிவருகிறார்கள். இந்த நிலையில், கனிமொழியை தோற்கடித்தே தீரவேண்டும் என்று அ.தி.மு.க. கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது. அதற்காக நடிகர் சரத்குமாருக்கு கொம்பு சீவி களத்தில் இறக்கத் துடிக்கிறது.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் கட்சி ஆகியவை மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இதில், பாரிவேந்தரின் கட்சிக்கு சீட் கொடுக்கவேண்டும் என்பது பா.ஜ.கவின் நிலைப்பாடு. வாழ்நாளில் ஒரு முறையாவது எம்.பி. பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று துடிக்கும் பாரிவேந்தர் இதற்காக ஏகப்பட்ட பணத்தைக் கொட்டுவதற்குத் தயாராக இருக்கிறார்.

அதேநேரம் சரத்குமாரின் நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. ஏகப்பட்ட நஷ்டம், கடன் போன்ற தொந்தரவுகளுடன் இருக்கிறார் சரத்குமார். அதனால் அவர் கூட்டணியில் போட்டியிட முன்வருவதே, எப்படியாவது சில கோடிகளை லபக் செய்துவிடலாம் என்ற ஆசையில்தான். அவரது ஆசையைப் புரிந்துகொண்ட எடப்பாடி டீம், அவரிடம் விலாவாரியாக டீல் பேசியதாம்.தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அ.தி.மு.க. சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அப்படி இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால், உங்களுக்கான தேர்தல் செலவுகள் அனைத்தையும் அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும். எப்படியாவது கனிமொழியை தோற்கடித்துவிட்டால், உங்கள் கைச்செலவுக்கும் பணம் கொடுக்கப்படும் என்று பேசப்பட்டுள்ளது தேர்தலுக்கு முன்பு எந்தத் தொகையும் கொடுக்கப்பட மாட்டாது என்றும், ஒருவேளை தோல்வி அடைந்தாலும் தொகை கிடைக்காது என்பதும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

இதற்கு தடாலடியாக சம்மதம் தெரிவித்திருக்கும் சரத்குமார், இப்போது ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் முன்வைத்திருக்கிறாராம். அதாவது 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம். அதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி டீம், இத்தனை பெரிய தொகைக்கு ஆசைப்படுவதாக இருந்தால் கூட்டணியில் இருக்கவேண்டாம் என்று கட் அண்ட் ரைட்டாக தெரிவித்திருக்கிறது. அதனால் கொடுப்பதைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறாராம்.

ஒருவேளை தேர்தலில் சரத்குமார் ஜெயித்தால் ஒரு கோடி ரூபாய் கொடுக்கலாம் என்று எடப்பாடிக்கு நோட் போட்டிருக்கிறார்களாம். காசுக்காக கனிமொழியை எதிர்க்க வருகிறார் சரத்குமார். தூத்துக்குடி மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.