செளமியாவுக்கு அடுத்து சங்கமித்ராவுக்கு அரசியல் டிரெயினிங்

அரசியல் களத்தில் தன்னுடைய குடும்பம் தவிர வேறு யாரும் பதவி வாங்கிவிடக்கூடாது என்பதில் ரொம்பவே தெளிவாக இருப்பவர் டாக்டர் ராமதாஸ். அன்புமணிக்கு அப்புறம் செளமியாவை அரசியலில் இறக்கியது போலவே இப்போது பேத்தி சங்கமித்ராவையும் இறக்க திட்டம் தீட்டியிருக்கிறார்.


நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் செளமியா அன்புமணியின் வெற்றி நிலவரம் இன்னமும் தெரியவரவில்லை. அதற்குள் சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கு சங்கமித்ராவுக்கு அரசியல் டிரெயினிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

கடந்த தேர்தலில் சௌமியாவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பெண்களை கட்டி அணைத்து உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார்கள். குறிப்பாக முதல் மகளான சம்யுக்தா சில நாட்கள் தனது குழந்தைகளான அகிரா, மிளிர் ஆகியோருடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.

சங்கமித்ராவுக்குக் கிடைத்த ஆதரவை பார்த்ததும் டாக்டர் ராம்தாஸ் அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சங்கமித்ராவை களம் இறக்குவதற்கு முடிவு செய்திருக்கிறாராம். இப்போதே தொகுதி மக்களை நன்றாக கவனித்துக்கொள், நாளை தேர்தலுக்குத் தேவைப்படும் என்று சொல்லியது மட்டுமின்றி, அரசியல் பற்றி முழுமையாக வகுப்பு எடுக்கிறாராம்.

நானோ என்னுடைய குடும்பத்தாரோ தேர்தல் அரசியலுக்குள் வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று சொன்ன ராமதாஸே இப்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அரசியலுக்குள் நுழைப்பதைப் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்ணீர் வடிக்கிறார்கள்.