அவியலை இப்படிச் செய்து பாருங்கள்! தேங்காய் எண்ணைய் கம கமக்க...அதன் சுவையே தனிதான்!

அவியல் என்பது அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யக்கூடிய ஒருவகை பதார்த்தம். இது கூட்டின் ஒருவகைதான் என்றாலும் அவியலுக்காக காய்கறிகளை நறுக்கும் விதம் மற்றும் அதை செய்யும் முறை அதன் சுவையை கூட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்.


தேவையான பொருட்கள்:

கேரட், பீன்ஸ் அல்லது கொத்தவரை, முருங்கை, கத்திரி, சேனை, புடலங்காய், வெள்ளரி, வாழைக்காய், வெள்ளைப் பூசணி எல்லாம் சேர்த்து - 500 கிராம், புளி – ஒரு எலுமிச்சை அளவு

அரைக்கத் தேவையான் பொருட்கள்

தேங்காய் - அரைகப்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2- 3

சிகப்பு மிளகாய் - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். காய்கறிகளை ஒரே போல் மெல்லியதாக நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் வடிகட்டிய புளியை விட்டு அதில் காய்கறிகளை போட்டு தேவைக்கு சிறிது உப்பு, மஞ்சத்தூள் போட்டு வேக வைக்கவும்.

காய் வெந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். அடுப்பை மீடியமாக வைத்து சிறிது கொதிக்க விட்டு பிரட்டி விடவும். அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அடுப்பிலிருந்து இறக்கும் முன் சிறிது கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணைய் விட்டு நன்கு கிளறி இறக்கவும். அவியலுக்கு தாளிக்கத் தேவையில்லை.

சிலர் புளிக்குப் பதில் தயிர் சேர்த்து அவியல் செய்வார்கள். அதன் சுவை வேறுபடும். புளி சேர்த்து செய்யும் அவியல் மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகளை குக்கரிலும் இரண்டு விசில் விட்டு வேகவைக்கலாம். காய்கறிகள் குழையாமலும், தண்ணிர் அதிகம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவியலின் சரியான பதம், காய்கறிகள் உதிரியாக, அதே நேரத்தில் சேர்ந்தும் இருக்க வேண்டும். இதற்கு தேங்காய் அரைக்கும் போது சிறிது அரிசி சேர்த்தும் அரைக்கலாம்.