பறக்கும் சக்தி படைத்த பெண் சித்தர் – பெண்களின் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்கரை அம்மா

சித்தர்கள் என்றாலே ஆண் சித்தர்கள்தான் நினைவிற்கு வருவார்கள். ஆனால் ஆண் சித்தர்களை போலவே அரிய சக்தி பெற்ற சில பெண் சித்தர்களும் இருந்துள்ளார்கள்.


அவர்களில் ஒருவரே ஸ்ரீ சக்கரை அம்மா அவர்கள். இவரை பறவை சித்தர் என்றும் அழைத்திருக்கின்றார்களாம். இவர் சென்னையில் கலாஷேத்திரா மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் சமாதி ஆலயத்தின் இடைப் பகுதியில் சமாதி அடைந்துள்ளார். ஸ்ரீ சக்கரை அம்மா என அழைக்கப்பட்ட அந்த அன்னையாரின் இயற்கை பெயர் ஆனந்தம்மா என்பதாகும்.

தெய்வீகப் பெண்மணியான ஸ்ரீ சக்கரை அம்மா அவர்கள் 1854 ஆம் ஆண்டில் வடஆற்காட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். பெரியநாயகி அம்மன் எனும் ஒரு ஆலயத்தில் அர்ச்சகராக இருந்த அவருடைய தந்தை சேஷ குருக்கள் மற்றும் அவர் மனைவி சுந்தராம்பாள் என்பவர்களுக்கு பிறந்த ஆனந்தம்மா இளம் வயதிலேயே வித்தியாசமான பெண்ணாக வளர்ந்தவர். அவர் ஆனந்தம் எனும் வருடத்தில் பிறந்ததினால் அவருடைய பெயரை ஆனந்தம்மா என வைத்தார்கள். இளம் வயதிலேயே தனது தந்தை மூலம் சிவஸ்துதிகளை கற்று அறிந்தார். அந்த அன்னையின் வீட்டின் அருகில் இருந்த ஆலயத்தில்தான் அவருடைய தந்தையும் பணி புரிந்து வந்தார். ஆகவே அவர் தனது தந்தையுடன் ஆலயத்துக்கு அடிக்கடி சென்று பல மணிநேரம் அமர்ந்திருந்து மூல தேவியை பார்த்தவாறு தியானத்தில் இருப்பாராம்.

இப்படியாக இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவராக, சம்சார மற்றும் உலகப் பற்று இல்லாமல் வாழ்ந்து வருகையில் அந்த கால ஆச்சாரத்தின்படி அவருடைய ஒன்பது வயதிலேயே சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவரும், அவருடைய தாயின் உறவினருமான திரு சாம்பசிவ சிவாச்சாரியார் என்பவருடன் திருமணமும் செய்து வைத்தார்கள். அன்னையின் இருபது வயதிலேயே கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

இது அந்த தெய்வீக அன்னைக்கு வசதியாகிவிட்டது. தன்னை முழுமையாக ஆன்மீகத்தில் இணைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார். வீட்டின் அருகில் இருந்த கோமளீஸ்வரர் எனும் சிவபெருமானின் ஆலயத்தில் சென்று அமர்ந்து கொண்டு மணிக் கணக்கில் தியானம் செய்து தனது காலத்தை ஓட்டினாள்.

இந்த நிலையில் கணவர் இறந்த சில காலம் பொறுத்து போளூர் எனும் ஊரில் இருந்த தனது சகோதரர் வீட்டில் சென்று வசிக்கத் துவங்கியபோதுதான் அவரது வாழ்க்கையில் மாற்றம் நிகழத் துவங்கியது. அந்த ஊரில் நட்ஷத்திரக் குன்று என்ற சிறு மலை முகப்பு இருந்தது. அதன் மீது ஒரு ஆலயம். அந்த ஆலய மண்டபத்தில் தனிமையில் அமர்ந்தவாறு தியானத்தில் இருந்த குணாம்பா எனும் பெண் சன்யாசினியை அன்னை ஆனந்தம்மா சந்திக்க நேரிட்டது. இனம் தெரியாமல் அன்னை ஆனந்தம்மாவிற்கு அவர் மீது ஈடுபாடு ஏற்படவே சன்யாசினி குணாம்பாவையே தனது குருவாக ஏற்றுக் கொண்டு அடிக்கடி அவரை சந்திக்கலானார். சில காலத்திலேயே அவரிடம் இருந்து ஞான தீட்ஷை பெற்றார்.

சன்யாசினி குணாம்பா அவருக்கு மிகவும் ரஹஸ்யமான ஸ்ரீ சக்கர உபாசனை மந்திரத்தை உபதேசித்ததும் இல்லாமல் எங்கு இருந்தாலும் அவர் தன்னை வந்து சந்திக்கும் வகையில் உடலை லேசாக்கி பறவையைப் போல பறந்து செல்லும் லஹிமா எனும் மந்திர தீட்ஷையையும் கொடுத்தார். அதன் மூலம் அன்னை ஆனந்தம்மாவிற்கு எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லும் சக்தி கிடைத்தது.

இந்த அன்னை இப்படி ஒரு சக்தி பெற்றவராக இருந்ததை காணும் பாக்கியத்தைப் பெற்றவர்களில் திரு.வீ.கா என அழைக்கப்படும் திரு கல்யாண சுந்தர முதலியார் அவர்களே சாட்சி. அதற்கு ஆதாரமாக இது குறித்து தமது நூலான ‘உள்ளொளி’ என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளாராம். ஒருமுறை அவர் இன்றைய புதுப்பேட்டை எனப்படும் இடத்தில் இருந்த வெஸ்லி காலேஜ் எனும் கல்வி நிலையத்தின் மாடியில் நின்று கொண்டு இருந்தபோது அந்த மொட்டை மாடியில் ஆனந்தம்மா ஆகாய மார்கமாய் பறந்து வந்து அமர்ந்ததாக தனது உள்ளொளி எனும் புத்தகத்தில் எழுதி உள்ளார். அதைக் கேள்விப்பட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் சென்னை மியூசியத்தில் தலமைப் பொறுப்பில் இருந்தவருமான ஐரோப்பியர் ஒருவர் அந்த அன்னைக்கு உடலளவில் பறவைகளின் பறக்கும் சக்தி இருந்ததாகவும், அவர் பறவை இனத்தை சார்ந்த உளவியல் அமைப்பையையும், தன்மையையும் கொண்டு இருந்ததாகவும் கூறினாராம்.

சன்யாசினி குணாம்பாவிடம் ஞான தீட்ஷை பெற்றுக் கொண்ட ஆனந்தம்மா, தனது வீட்டு மொட்டை மாடியில் தன்மையில் சென்று அமர்ந்து கொள்வதுண்டு. அப்படி அமர்ந்து இருக்கையில் பேரானந்த நிலையில் மூழ்கி போவார். ஒருமுறை அவருடைய சகோதரர் நோயினால் பீடிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியம் பார்க்க அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஆன்மீகவாதியும், மருத்துவருமான டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

வீட்டுக்கு வந்தவர் வீட்டில் இருக்கையிலேயே மாடியில் ஆனந்தம்மா அட்டகாசமாக சிரித்துக் கொண்டு இருந்தார். அதைக் கேட்டு ஒரு கணம் திகைத்து நின்றவரிடம் அப்படி சிரித்துக் கொண்டு இருந்தவர் மன வியாதி பிடித்தவர் என அவர் வீட்டினர் கூறினாலும் அந்த மருத்துவர் மனதில் மட்டும் அது உண்மையாக இருக்காது எனும் ஒரு வித்தியாசமான உணர்வு தோன்றியது. அவளுடைய சிரிப்பு வெறும் சிரிப்பு அல்ல என்பதாக மனது கூறியது. அமைதியாகி விட்டார். இன்னும் சிலநாட்களில் ஆனந்தம்மாவை அதே சிரித்த கோலத்தில் கோமளீஸ்வரன் ஆலயத்திலும் அவர் சந்திக்க நேரிட்டது. சற்று நேரம் அதை கவனித்த மருத்துவர் நஞ்சுண்ட ராவ் அந்த அன்னையிடம் நேரடியாக சென்று அவர்கள் சிரிப்பதின் காரணம் என்ன எனக் கேட்டார். சிரிப்பதை சற்றே நிறுத்திய ஆனந்தம்மா ‘ஆன்மாவும் உடலும் வெவ்வெறானவை எனும் தத்துவத்தை கூறி, அவளது உடலுக்குள் உள்ள ஆன்மா பேரானந்த நிலையில் இருப்பதினால் அது ஆனந்தமாக உள்ள தனது நிலையை தன் உடல் மூலம் வெளிப்படுத்துகின்றது என்பதான அர்த்தத்தில் ஆன்மாவைக் குறித்து விளக்கினார். அப்போதுதான் அந்த பெண்மணி சாதாரணப் பெண்மணி அல்ல, அவள் தெய்வீக அன்னை என்பதை மனதார புரிந்து கொண்டு அவர் காலடியில் அப்படியே விழுந்து நமஸ்கரித்தார். அன்று முதல் அந்த ஆனந்தம்மாவையே தனது மானசீகமான குருவாக, தெய்வமாகவே ஏற்றுக் கொண்டார் நஞ்சுண்ட ராவ்.

பல ஆலயங்களுக்கும் தானே அந்த அன்னையை அழைத்துச் சென்றார். பின்னாளில் அவரே அந்த அன்னையின் புகழ் அனைவரிடமும் பரவக் காரணம் ஆகி இருந்தார். மெல்ல மெல்ல சிவபெருமானின் பூஜையோடு ஸ்ரீ சக்கர ஆராதனை சேர்ந்து செய்து வந்த ஆனந்தம்மாவின் பெயரும் ஸ்ரீ சக்கர அம்மா என அழைக்கப்பட அதுவும் பின் நாளில் ஸ்ரீ சக்கரையம்மா என மருவி விட்டது. ஒருமுறை ரமணா மகரிஷியை சந்தித்த அன்னை தன்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொள்ள, அவரோ அந்த அன்னை ஏற்கனவே தெய்வத்தால் பரிபூரணமாக ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வ அன்னை எனக் கூறி விட்டாராம். ரமணா மகரிஷியை சந்திக்க ஆனந்தம்மா வானத்தில் பறந்தே சென்றார் என்றும் சில தகவல்கள் உண்டு. மெல்ல மெல்ல திரு நஞ்சுண்டராவைத் தவிர வேறு பலரும் அன்னையின் சீடர்களாகி இருந்தனர். பல ஆன்மீகப் பெரியோர்களுடன் ஆன்மீகத் தொடர்ப்பில் அந்த அன்னை இருந்தார்கள். கௌதம முனிவரின் சீடரான அடிமுடி முனிவர் இவருக்கு முக்தியை அடையும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தாராம்.

1899 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 1900 ஆம் ஆண்டுவாக்கில் திரு நஞ்சுண்ட ராவ் அன்னை அவர்களை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் அழைத்துச் சென்றார். திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் காட்டி அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தான் தனது பூத உடலைவிட்டு நீங்கியதும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அதன் பின் தான் அதே சமாதியில் என்றென்றும் இருந்து கொண்டு அனைவருக்கும் அருள் புரிந்து வருவேன் என்றும் உறுதி மொழி தந்து அந்த இடத்தை விலைக்கு வாங்கச் செய்தார். 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் ஸ்ரீ சக்கரையம்மா சமாதி அடைந்ததும் அந்த இடத்திலேயே அவரை அடக்கம் செய்து, அதை ஆலயமாக மாற்றி விட்டார்கள். அவர் சமாதிக்கு சென்று வழிபடும் பக்தர்களுக்கு அளவில்லா அருளாசிகளை வழங்கி வருகின்றார். அந்த ஆலயம் கலாட்சேத்திரா சாலையும் காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைதியான சூழலில் காணப்படுகின்றது.

இன்றும் இந்த ஜீவ சமாதியில் இங்குமங்கும் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள் அடியவர்கள். இங்கு மாதாந்திர திருவாதிரை,பௌர்ணமி நாட்கள் சிறப்பு. இதன் அருகிலேயே முருக அடியவர் மகான் பாம்பன் சுவாமிகள் சமாதி திருக்கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மன நிம்மதி வேண்டுபவர்கள்,மனகுழப்பம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் உடனே சரியாகும். அதுமட்டுமல்ல சக்கரை அம்மா சன்னதி வந்து தொடர்ந்து 11 திருவாதிரை நாட்கள் வழிபட உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறும்.இங்கே சென்றவர்களின் மன உளைச்சல், தீராத வியாதி, குடும்பத்தில் மன வருத்தங்கள் ஆகியனவற்றுக்குத் தீர்வு கிடைப்பதாயும் கூறுகின்றனர். ஆலயத்தின் பின்னால் இருக்கும் கூடத்தில் இலவசமாக சிறுவர்,சிறுமிகளுக்கு நீதிக்கதைகள், ஆன்மீக சிந்தனைகள், போதிக்கப்படுகின்றன.கோயிலை நிர்வகிப்பது திருமதி சுமனா சுரேஷ் என்பவர்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு சக்கரை அம்மாவை பக்கத்துணையாக கைதொழுகிறார்கள். பொதுவாக பெண்கள் தம் குறைகளை மட்டுமல்ல, பெண்களின் உடல்சார்ந்த பிரச்சனைகளுக்கும் இத்தலத்தில் தீர்வு கிட்டுகிறதாம். குறிப்பாக பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இங்குவந்தால் உடனடி தீர்வு கிட்டுகிறதாம். இத்தல திருநீற்றினை எடுத்துப் பெண்கள் தினமும் தொடர்ந்து ஒருமண்டலம் உட்கொண்டு வந்தால் கண்டிப்பாக பெண்களின் உடல்சார்ந்த பிரச்னைகள் விலகிவிடும் என்கிறார்கள்.