திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவி

கம்யூனிஸ்ட் கண்டனம்


தமிழ்நாடு கவர்னர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் திருவள்ளுவரை கொச்சப்படுத்திவிட்டதாக கொந்தளித்துள்ளனர். திருவள்ளுவர் தின விழாவை இன்று கொண்டாட வேண்டிய அவசியம் என்ன..? திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து கொச்சைப்படுத்துவது மட்டுமின்றி அவரை குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக காட்ட முயற்சிக்கிறார் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை வழிபாடு செய்தார்.

உலகப்பொதுமறை தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோயிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

இந்த ஆண்டு வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று (மே 24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

தமிழகத்தில் வேண்டுமென்றே மதப் பிரச்னையை உருவாக்க ரவி முயற்சிக்கிறார் என்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.