சென்னை: காதலனை தேடி தமிழகம் வந்த இலங்கைப் பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
காதலனை தேடி கடல் கடந்து வந்த காதலி மாயம்..! தமிழகம் முழுவதும் தேடித் திரியும் பெண்ணின் தந்தை! எங்கே போனார் ரிஸ்வி?

இலங்கையில் உள்ள ரத்தினபுரி மாவட்டம், சமகிபுராவைச் சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன். இவரது மகள் ரிஸ்வி பாத்திமா குப்தா. 21 வயதாகும் பாத்திமா, பண்ருட்டி அருகே உள்ள ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த முபாரக் என்ற இளைஞருடன் பேஸ்புக் மூலமாக, நெருங்கிப் பழக தொடங்கியுள்ளார்.
படிப்படியாக, இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. காதல் தலைக்கேறிய நிலையில் பாத்திமா திடீரென கடந்த பிப்ரவரி 26ம் தேதி சென்னைக்கு சுற்றுலா விசா எடுத்து விமானத்தில் வந்து, காதலனை சந்தித்தார்.
இந்த விசயம் கேள்விப்பட்டதும், குவைத்தில் வேலை பார்க்கும் பாத்திமாவின் தந்தை கண்ணீர் மல்க, பதறியடித்து சென்னை ஓடிவந்தார். தமுமுக அமைப்பினரின் உதவியுடன் ஆண்டிக்குப்பம் பகுதிக்கு ஜெயினுலாபுதீன் சென்று பார்த்தார். ஆனால், அங்கு முபாரக்கை காணவில்லை. அவரது மகளையும் காணவில்லை.
இதையடுத்து, காதல் ஜோடி தலைமறைவாகி இருக்கலாம் அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் விபரீதம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஜெயினுலாபுதீன் கடலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.