துன்பங்கள் வராமல் தடுக்கும் நவராத்திரி விரதம்! ஒன்பது நாளில் செய்யவேண்டிய சக்தி வழிபாடு!

சக்தியாகிய அம்பிகைக்கு உரிய வழிபாடுகளும் விரதங்களும் நற்பலன்களை வழங்குபவை. அவற்றில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.


நவம் என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகள் அம்பிகையை பலவடிவங்களில் பூஜைசெய்து அவளின் அருளைப் பெற்று பத்தாம் நாள் வெற்றித் திருநாளாக அதாவது விஜயதசமியாகக் கொண்டாடுவார்கள். 

பங்குனி புரட்டாசி என்ற இரண்டு மாதங்களை எமனின் கோரைப்பற்கள் என்பார்கள். நெய்குடத்தை எறும்புகள் மொய்த்துக்கொள்வதைப் போல நோய்கள் அப்போது நம் உடம்பை பற்றிக் கொள்ளும். அவை உடனடியாக வெளியேறாது. சில நாட்கள் வீரியமாக இருந்து துன்பத்தில் ஆழ்த்தும் என்கின்றன புராணங்கள். இத்தகைய துன்பங்கள் வராமல் தவிர்க்கவே சக்திக்குரிய வழிபாடுகளை இறைவன் கொடுத்ததாக பெரியோர் சொல்வர். 

தேவியை பங்குனி மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வழிபடுவது சாரதா நவராத்திரி. சாரதா என்பது சரஸ்வதி தேவியைக் குறிக்கும். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை முதல் நவமி வரை சாரதா நவராத்திரி என்ற பெயரில் முப்பெரும் தேவியரை ஆராதிக்கும் விழா நடைபெறுகிறது.

ஆதிசக்தி, பார்வதி என்றெல்லாம் அழைக்கப்படும் பராசக்தியே அனைத்திற்கும் மூலமானவள்.  அவளுக்கு உருவம் கிடையாது. உருவமற்ற தேவியை உணரவே உருவமாக வைத்து வழிபடுகிறோம்.  

மனித வாழ்வின் ஆதாரமான செல்வத்தை பெற மகாலட்சுமி வழிபாடும், அந்த செல்வத்தை அறிந்து உணர்ந்து நல்வழியில் பயன்படுத்தத் தேவையான அறிவு, கல்வி வழங்க சரஸ்வதி தேவியையும், அவற்றை தக்க வைக்க துணிவும் வீரமும் தேவை என்பதால் அதனை வழங்க துர்க்கை வழிபாடும் ஏற்பட்டன. 

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்யப்படுகின்றன. இறுதியில் நல்லறிவு, ஞானம் வேண்டி விஜயதசமியன்று பூஜைகளை பூர்த்தி செய்வார்கள். வடநாட்டிலும் துர்க்கா பூஜை என்ற பெயரில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்களும், மூன்று அடிப்படை குணங்களான 'தமஸ், ரஜஸ், சத்வ' வை பொருத்து வகைபடுத்தப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தமஸ்.

அன்று தேவி உக்கிரமாக இருப்பாள், துர்கா, காளி போன்று. அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியை சார்ந்தவை. இவள் கொஞ்சம் மென்மையானவள், ஆனால் செல்வ வளத்தை ஒத்தவள். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை சார்ந்தது, அதாவது சத்வ குணம் நிறைந்தது. இது ஞானம், ஞானமடைதலை ஒத்தது. 

தமஸ் என்பது பூமியின் குணம். அவள் தான் பிறப்பிற்கு ஆதாரம். தாயின் வயிற்றிலே பிள்ளையாய் நாம் கருவுற்றிருந்த காலம் தமஸ். அது கிட்டத்தட்ட செயலற்ற நிலை என்றாலும், அப்போது வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் தமஸ் என்பது பூமியின் குணம், அதுவே உங்கள் பிறப்பின் குணமும்.

கருவில் இருந்து வெளிவந்தவுடன், உங்கள் செயல் துவங்குகிறது, அதாவது ரஜஸ். அதன் பின் தேவையான விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தாலோ, அல்லது நீங்கள் பாக்கியசாலியாக இருந்தாலோ, சத்வ உங்களைத் தீண்டிடும் நற்கதி உங்களுக்குக் கிட்டும். 

இந்த ஒன்பது நாட்களும் இதுபோல் அமைந்திருக்கக் காரணம், எப்படியும் நாம் பூமியில் இருந்து தான் எழுகிறோம். இது தான் முதல்நிலை. அதன்பின் கொஞ்சம் தீவிரமான வாழ்க்கை வாழ்கிறோம், இது ரஜஸ், அதாவது தேவியின் இரண்டாவது குணம். தேவியின் மூன்றாவது தன்மை உங்களை அடையலாம், இல்லை உங்கள் வழி வராமலும் போகலாம்.

தேவியின் இத்தன்மை உங்களுக்கு வேண்டுமெனில், நீங்கள் மெனக்கெட வேண்டும். இல்லையெனில் அவள் உங்களுக்கு இறங்கி வரமாட்டாள். காளி தரையில் வீற்றிருக்கிறாள், லக்ஷ்மியோ தாமரையில் அமர்ந்திருக்கிறாள், ஆனால் சரஸ்வதி தேவி எப்போதும் மயில் வாகனத்தில் தான் காட்சி தருகிறாள்.