அன்னை மீனாட்சிக்கு மட்டும் ஏன் மூன்று மார்பகங்கள்?

மலையத்துவஜன் மகளாகப் பிறந்து பட்டத்தரசியான மீனாட்சி, ஒரே குடையின் கீழ்உலகத்தைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டாள்.


மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.

அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.

அக்குழந்தை போர்க்கலை, சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள். தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள்.

கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

அம்பிகை தானே காரிய காரணத்துடன் தனக்கு மூன்று தனங்களை வருவித்துக் கொண்டதாகவும் சில குறிப்புகள் உள்ளன.. சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே! அது ஒரு காரணம். அவர் வழக்கமான கண்களுடன் நெற்றியிலுள்ள கண்ணாலும் ஜீவன்களை கண்காணிக்கிறார். கோபம் வரும் போது வெப்பத்தை உமிழ்கிறார். இதனால் ஜீவன்கள் நடுங்குகின்றன. தந்தை கண்டிப்புக்காரராக இருந்தாலும், தாயார் அனுசரணையாக இருப்பாள் அல்லவா? அப்படி தந்தையின் கண்டிப்பில் தவிக்கும் உயிர்களை அம்பிகை முப்பால் ஊட்டி தாலாட்டுகிறாள்.