சப்ரிமலையில் ஐயப்பன் தவம் இருப்பது யாருக்காக? ஆன்மிக மகிமை இது!

கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் ஆகியவை ஒரே சீராக இருக்கும்.


ஐயப்பன் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார். இதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. ஒருமுறை ஐயப்பனை காண, அவரை வளர்த்து ஆளாக்கிய பந்தள மகாராஜா வந்தார்.

அவர் வந்தபோது தந்தை என்ற காரணத்தால், அவருக்கு மதிப்பு வழங்கும் நோக்கத்தில் ஐயப்பன் எழ முயன்றார். இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக்கூடாது என்பதற்காக, தான் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை, ஐயப்பனை நோக்கி தந்தையான பந்தள மகாராஜா தூக்கி போட்டாராம்.

அப்போது அந்த அங்கவஸ்திரம், ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் என்றும் கூறுகிறார்கள். ஐயப்பனின் இந்த திரு உருக்காட்சி, பல்வேறு வாழ்வியல் பண்புகளையும் பக்தர்களுக்கு உணர்த்தி நிற்கிறது.

தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். சித் என்றால் அறிவு எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்" என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த 'சின்" முத்திரையாகும்.

'சின்" முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்குளிரத் தரிசிப்பது என்பது, பிறவிப் பயனை அடைந்த சந்தோஷத்தைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் நடை மூடப்படும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அத்துடன், ஐயப்பனின் 'சின்" முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள். இதற்கு தவக்கோலம் என்று பெயர்.

அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும். இந்த அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது. கோவில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.

அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. 'சின்" முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும். இந்த அதிசயத்தை காணக் கண்கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.