ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும்.
ரத சப்தமி நாளில் இப்படித்தான் ஸ்நானம் செய்ய வேண்டும். நோய்களைத் தீர்ப்பார் சூரிய பகவான்!
ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர்.
குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.
சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.
சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம். ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.
சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் ரத சப்தமி நன்னாள். சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!
முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம்.