தலைமை சொல்லியும் கண்டுக்காத அதிருப்தியாளர்... அதிர்ச்சியில் ராமநாதபுரம் தி.மு.க.

ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முத்துராமலிங்கத்திற்கும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் திவாகரனுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இதில் சீட் வேறு கிடைக்காததில் ரொம்பவே உஷ்ணமாகிவிட்டார் திவாகரன்.


‘எங்களை ஓரம் கட்டிவிட்டு சீட் கொடுத்திருக்காங்க. அந்த ஆள் எப்படி ஜெயிக்கிறாருன்னு பார்க்கலாம்’ என படு ஓப்பனாகவே சவால் விட்டுக் கொண்டிருந்தார். பதறிப்போன முத்துராமலிங்கம் தலைமைக்கு தகவல் அனுப்பினார்.

தலைமையிலிருந்து முன்னாள் அமைச்சரும், முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளருமான கண்ணப்பனை தொடர்புகொண்டு சமாதானம் செய்யும்படி கூறியிருக்கிறார்கள். தேர்தல் பரபரப்பிலும் கண்ணப்பன் நேரம் ஒதுக்கி வெள்ளை கொடியை அசைத்தாலும் பலன் என்னவோ பூஜ்யம்தான். இதனால் வெறுத்துப்போன கண்ணப்பன், திவாகரனை தனது தொகுதிக்கு அழைத்துச் சென்றார்.

பகல் நேரங்களில் கண்ணப்பனுடன் ஓப்புக்கு ரவுண்ட் அடிக்கும் திவாகரன், நண்பர்களுடன் இரவில் ராமநாதபுரம் தொகுதிக்கு ரகசிய விசிட் அடிப்பதாகக் கேள்வி. பலரையும் சந்தித்து உள்ளடி வேலையில் அவர்கள் ஈடுபட்டு வருவதை அறிந்த முத்துராமலிங்கம் தரப்பு நொந்துபோயுள்ளது.

தலைமை இருப்பது சரிதான். அதை யார் கண்டுகொள்வது..?