நள்ளிரவில் அத்திவரதர் தரிசனம்! ரஜினியால் பரபரப்பான காஞ்சிபுரம்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு திடீரென காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்து திரும்பினார்.


அத்திவரதர் வைபவம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் சாதாரண கவுன்சிலர் வரை பலரும் தினமும் சென்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் பேர் தற்போது அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் ரஜினியின் மனைவி லதா தனது மகள்களுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். விரைவில் ரஜினியும் அத்திவரதரை தரிசிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி நேற்று இரவு திடீரென காஞ்சிபுரம் வருகை தந்தார்.

நள்ளிரவு 12 மணிக்கு பிறகு ரஜினி வந்ததால் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பலத்த பாதுகாப்புடன் அவர் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை கோவில் பட்டர்கள் வரவேற்றனர்.

பிறகு தனது மனைவியுடன் அத்திவரதர் சன்னதியில் அமர்ந்து ரஜினி மனம் உருக வேண்டிக் கொண்டார். தரிசனத்தை முடித்த பிறகும்  ரஜினியை பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர்.