மோடி தான் பலசாலி என்று உரக்கச் சொன்ன ரஜினி! ரெய்டுக்குப் பயந்து பின்வாங்கினாரா?

ஏழு பேர் விடுதலை குறித்து எக்குத்தப்பாகப் பேசிய ரஜினிகாந்த், அடுத்த நாளே மீண்டும் மீடியாவை சந்தித்து வரிக்கு வரி விளக்கம் கொடுக்க முன்வந்ததற்கு காரணம் தெரியவந்திருக்கிறது.


பத்து கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பதால், பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்று ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில், ‘அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று அவரது பாணியில் பதில் சொல்லிவிட்டுச் சென்றார் ரஜினி. அதோடு, ‘ஏழு பேரை தெரியாது’ என்று ரஜினி பேசியதும் தமிழகம் முழுவதும் தீயாக பற்றி எரிந்தது. 

இந்த சூழலில் இன்று மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, ‘ஏழு பேரை தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை’ என்று தெளிவாகச் சொன்னார். அதன்பிறகு பா.ஜ.க. கட்சி குறித்து கேள்வி எழுப்பிய நேரத்தில், தன்னுடைய ஆதரவு பா.ஜ.கவுக்கு இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாக சொல்லும் வகையில் பதில் சொன்னார்.

பத்து பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்க்கிறார் என்றால், அவர்தான் பலசாலி என்று மோடியை உயர்த்திப் பேசி ஒரேயடியாக பல்டி அடித்தார். பா.ஜ.க. பற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்டபோது, அதை வெளிப்படையாக சொல்லாமல் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்புடன் தவிர்த்துவிட்டார். 

இன்று ரஜினி வெளிப்படையாக பேசுவதற்கு முன்வந்ததற்கு காரணம் பி.ஜே.பி.தானாம். ரஜினியை தொடர்ந்து சந்தித்துப் பேசும் பா.ஜ.க. பிரமுகர் சொல்லிக்கொடுத்த ஸ்க்ரிப்ட்டைத்தான் இன்று ரஜினி படித்தாராம். பா.ஜ.க.வை ஆபத்தான கட்சி என்று சொன்னதை வாபஸ் வாங்க வேண்டும் என்று கட்டளை போடப்பட்டதாம். ரஜினியின் சொல்லுக்கு வலிமை அதிகம் என்பதால், ஆபத்தான கட்சி என்பது மக்களிடம் பதிவாகிவிட்டால், பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதை பா.ஜ.க. புரிந்துகொண்டதாம்.

அதனால்தான் கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட்டு இன்று பகலில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் சூழலுக்கு ஆளானார். இந்த உத்தரவுக்குப் பின்னே ரெய்டு மிரட்டல் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. லதாவிடம் பேசிய பா.ஜ.க. மேலிடம், உடனடியாக ரஜினிகாந்த் ரியாக்ட் செய்யவேண்டும் எனவும், இல்லையென்றால் எப்படிப்பட்ட விளைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் விளக்கினார்களாம்.

வீட்டம்மா சொல்லும்போது தட்டமுடியுமா... ரஜினி அதனாலே வீட்டுக்கு வெளியே வந்து பேசினார் என்கிறார்கள். நாட்டுக்கு சூப்பர் ஸ்டார் ஆனாலும் வீட்டுக்கு புருஷன் தானே..?