மீண்டும் வருத்தம் தெரிவித்த ராகுல்! மோடியுடன் மோதி 2வது முறை மூக்கை உடைத்துக் கொண்ட பரிதாபம்!

ரஃபேல் விவகாரத்தில் மோடியை உச்சநீதிமன்றமே திருடன் என ஒப்புக் கொண்டுவிட்டதாக கூறியதற்காக ராகுல் காந்தி மீண்டும் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கசிந்த புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை கோரிய மறுஆய்வு மனுவை விசாரிக்க  உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இதை குறிப்பிட்டு காவலாளி எனக் கூறிக் கொள்ளும் மோடி ஒரு திருடன் என்ற குற்றச்சாட்டை  விசாரிக்க உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக ராகுல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

ஆனால் உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை கூறியதாக ராகுல் பிரச்சாரம் செய்வதாக கூறி அவருக்கு எதிராக பாஜக எம்.பி. மீனாட்சி லெகி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  கடந்த 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி சார்பில்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்தில் உச்சநீதிமன்றத்தை தொடர்புபடுத்தி திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தான் கூறியது போல அரசியல் எதிரிகள் திரித்துவிட்டதாக ராகுல் கூறியிருந்தார். இருப்பினும் அதற்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் ராகுல் காந்தியின் விளக்கத்தில் திருப்தி இல்லை என அப்போது நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் உச்சநீதிமன்றத்தை தவறாக பயன்படுத்திய உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், ராகுல்காந்தி தரப்பில் விளக்கம் அளித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உணர்ச்சி வேகத்தில், அரசியல் முழக்கத்துடன் உச்சநீதிமன்ற விசாரணையையும் சேர்த்துக் குறிப்பிட்டு விட்டதற்காக வருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார் ராகுல்காந்தி.

ஆனால் நிபந்தனையற்ற மன்னிப்பு எதுவும் ராகுல் கேட்கவில்லை. அதேசமயம் இந்த விவகாரத்தில் 2 முறை வருத்தம் தெரிவித்து மோடியுடன் மோதி ராகுல் மூக்கை உடைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.