ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த அகிலேஷ் யாதவ்

பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளர் என்று என்.டி.ஏ. கூட்டணி அறிவித்து பிரசாரம் செய்துவரும் நிலையில், இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. நான்கு கட்டத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், ‘ராகுல் காந்தியே எங்கள் பிரதமர் வேட்பாளர்’ என்று அகிலேஷ் அறிவித்திருப்பது அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இண்டியா கூட்டணி அரசு அமைந்தால், ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ இலவச ரேஷன் வழங்குவோம். உத்தரப்பிரதேசத்தில் இண்டியா கூட்டணி 79 இடங்களில் வெற்றி பெறும். ஒரு இடத்தில் வெற்றிபெறுவதற்காகவே பாஜக இங்கு(உத்தரப்பிரதேசம்) போட்டியிடுகிறது.

26 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதை முதல்முறையாக நான் பார்க்கிறேன். களம் எவ்வாறு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. பட்டியல் சமூகத்தவர்கள், பட்டியல் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம்.

மக்களுக்கு அளித்த அனைத்து உத்தரவாதங்களையும் நாங்கள் நிறைவேற்றுவோம். உணவு பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் நாங்கள். இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ ரேஷன் தருவோம்’’ தெரிவித்தார்.

அடுத்து பேசிய அகிலேஷ் யாதவ், “இண்டியா கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவை அளித்து வரும் நாட்டின் 140 கோடி மக்கள், பாஜக-வை 140 இடங்களுக்காக ஏங்க வைப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் 79 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார் பிரதமர் வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர்’ என்று தெரிவித்தார்.

மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் இதுவரை அகிலேஷ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முதல் கட்டத் தேர்தலில் இருந்தே ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்தித்திருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.