மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் மய அறிவிப்புகளால் நாட்டிற்கு மிகவும் மோசமான நாள் உருவாகியுள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிற்சங்க பிரிவு கூறியுள்ளது.
நிர்மலா சீதாராமனால் நாட்டிற்கு மிகவும் சோகமான நாள் ஏற்பட்டுள்ளது..! கொதிக்கும் ஆர்எஸ்எஸ்!
நிலக்கரித்துறை, கனிமவளத்துறை, மின்சாரத்துறை, விண்வெளித்துறை, அணு சக்தி துறை என 8 துறைகளில் மிகப்பெரிய சீர்திருத்த அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அதில் அனைத்து துறைகளிலும் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மேலும் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளும் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டன. நிர்மலாவின் இந்த அறிவிப்புகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிற்சங்க பிரிவான பாரதிய மஸ்தூர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனா பேரிடரால் தனியார் அமைப்புகள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. முதல் 3 நாட்கள் நிதி அமைச்சர் அறிவித்த அறிவிப்புகளால் மகிழ்ந்திருந்த மக்களுக்கு நிர்மலாவின் 4வது நாள் அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கவும், கார்ப்பரேட் மயமாக்கவும் ஏற்கனவே பாரதிய மஸ்தூர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. ஆனால் அதனை பொருட்படுத்தால் மத்திய அரசு தற்போது பேச்சுவார்த்தை, ஆலோசனைகளுக்கு கூட முன்வராமல் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இது மத்திய அரசு தன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதையே காட்டுகிறது.
நாட்டின் பொருளாதார கொள்கைகளை உருவாக்குபவர்களை பொறுத்தவரை பொருளாதார சீர்திருத்தம் என்றாலே தனியார் மயமாக்குவது என்றாகிவிட்டது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி நிற்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். யாரிடமும் ஆலோசனை மேற்கொள்ளாமல் தனியார்மயமாக்கல் முடிவுகளை நிதி அமைச்சர் அறிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
இவ்வாறு பாரதிய மஸ்தூர் சங்கம் கூறியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பின் தொழிற்சங்க பிரிவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்திருப்பது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.