பிரமீடுகளின் உச்சம் கிசா பிரமீடு! அறியவேண்டிய அரிய தகவல்கள்!

உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு.


எகிப்தில் தற்போது வரை சுமார் 100க்கும் மேற்பட்ட பிரமிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 4500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கிசாவில் உள்ள பிரமிடுகளே உலக அதிசயத்தில் இடம்பெற்றுள்ளன. அரசர்கள், அவரது குடும்பத்தினரை அடக்கம் செய்ய இந்தப் பிரமிடுகள் கட்டப்பட்டன. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது.

மம்மி என்பது இறந்தவர்களின் சடலங்களை பதப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருப்பதாகும். பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்தவுடன் மறு உலகிற்கு செல்வதாகவும்(தினந்தோறும் பயன்படுத்திய பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணங்கள்), அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைப்படுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

இக்காலத்தில் இதைப்போன்ற பிரமிடுகளை உருவாக்க 600 வருடங்களுக்கு மேல் ஆகும். எந்த தொழில்நுட்பத்தின் உதவியுமின்றி 15 முதல் 20 வருடத்திற்குள் இந்த பிரமிடுகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது இன்றும் நம்ப முடியாத உண்மையாகவே இருந்து வருகிறது. இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது.

இந்நகரைச் சுற்றி ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள்? இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள்? இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள்? என்பது இன்றும் கண்டுபிடிக்க முடியாத மர்ம முடிச்சாகவே உள்ளது.

பிரமிடின் உட்பகுதியில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. ஆனால், இரவிலும் கூட இதே வெப்பநிலை தொடர்வது இன்றும் ஆய்வாளர்களுக்கு வியப்பாகவே உள்ளது.

கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பைதகராஸ் என்கிற கணித விதிகளின்படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட சிற்பம், கிசா பிரமிடு முன் உள்ள இந்த ஸ்பிங்ஸ் சிலைதான்.

இந்த வகைப் பிரமிடுகள் மனிதர்களை விட பல்வேறு அதிசய ஆற்றல்களை கொண்ட வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்று ஒரு சிலர் கூறுகின்றனர். குட்டி பிரமிடுகள் முதல் பிரம்மாண்டமான பிரமிடுகள் வரை உள்ள இவை தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கொடுக்கவே இல்லை.