தூய்மை பணியாளர்களுக்கு தண்டனையா..? கொந்தளிக்கும் கமல்ஹாசனின் கட்சி

கமல்ஹாசனின் கட்சியின் தொழிலாளர் நல அணியின் மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னை மாநகராட்சியில் சுமார் 6400 நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 4500ஒப்பந்த தொழிலாளர்களும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 379.00ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 210.00ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களாக போற்றப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்காமல் தமிழக அரசு புறக்கணிப்பதை கண்டித்தும், ஊதியத்தை உயர்த்தி வழங்கிட கோரியும் கடந்த 07.09.2020அன்று ரிப்பன் மாளிகை முன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுளளனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு சொற்ப அளவில் (12.00ரூபாய்) மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக அறிவித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் சுமார் 291பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, 714தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்நோய் தொற்று காலத்தில் மக்கள் பணியில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்ட காரணத்திற்காக தொழிலாளர்களின் குரல்வளையை நெறிக்கின்ற வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டதையும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததையும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உரிமைகளுக்காக போராடியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் வலியுறுத்துவதோடு, தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று குரல் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.