சுதீசுடன் பிரச்சனையா? கேள்வி கேட்ட செய்தியாளர்! சண்டைக்கு சென்ற விஜயகாந்த் மகன்!

சென்னையில் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் சண்டைக்கு செல்வது போல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார்.


  சென்னை தண்டையார் பேட்டையில் தே.மு.தி.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. வழக்கமாக தே.மு.தி.க அலுவலகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு பிரியானியும், கேக்கும் கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதாவும் அமெரிக்காவில் இருக்கிறார்.

  இதனால் இந்த முறை தே.மு.தி.க அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஏற்பாடு நடைபெறவில்லை. மாறாக சென்னை தண்டையார் பேட்டையில் வட சென்னை தே.மு.தி.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஏழை எளிய மக்களுக்கு பிரியானியும், கேக்கும் வழங்கினார். அதனை தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

  அப்போது, தே.மு.தி.க நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து மேலிடம் முடிவெடுக்கும் என்றார். மேலும் தே.மு.தி.கவின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்களுடன் உள்ளதாகவும் கட்சியில் குளறுபடி என வெளியாகும் தகவல் தவறானது என்றும் அவர் தெரிவித்தார். கட்சி வளர்ந்து வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வமாக உள்ளதாகவும் விஜயபிரபாகரன் கூறினார்.

  அப்போது திடீரென செய்தியாளர் ஒருவர் விஜய பிரபாகரன் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டார். கட்சியில் உங்கள் வளர்ச்சிக்கு எல்.கே.சுதிஷ் முட்டுக் கட்டை போடுவதாக தகவல் வெளியானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் சற்று நிதானம் இழந்த விஜய பிரபாகரன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, என்ன கேட்டீர்கள்? என்ன கேட்டீர்கள்? என்று செய்தியாளரை நோக்கி வார்த்தையை வேகமாக்கினார்.

  மேலும் விஜயபிரபாகரன் கேட்ட முறை அந்த செய்தியாளரிடம் சண்டைக்கு செல்வது போல் இருந்தது. இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த அந்த செய்தியாளர், உங்களுக்கும் சுதீசுக்கும் பிரச்சனை என்றும், உங்களை வளர விடாமல் சுதீஷ் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறுவது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது நிதான நிலைமைக்கு வந்த விஜயபிரபாகரன், சுதீஷ் என் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக யார் சொன்னது? என்று குரலை உயர்த்தினார்.

 அத்துடன் என்னை பள்ளிக்கு சென்று விட்டது என் மாமா தான், என்னை கல்லூரியில் சேர்த்துவிட்டதும் என் மாமா தான், தற்போது என்னை அரசியலில் ஈடுபடுத்தியிருப்பதும் என் மாமா தான், என் வளர்ச்சிக்கு என் மாமா தான் காரணம், அவர் எப்படி என் வளர்சிக்கு முட்டுக்கட்டை போடுவார்? என்று பதில் கேள்வி எழுப்பினார் விஜயபிரபாகரன். மேலும் நீங்களாக ஏதோ கேட்கிறீர்கள், நீங்களாக ஏதோ பத்திரிகைகளில் எழுதுகிறீர்கள். அது எல்லாம் உண்மை இல்லை என்று கூறிவிட்டு விஜயபிரபாகரன் சென்றார்.

 


 வழக்கமாக கேப்டன் செய்தியாளர் சந்திப்பின் போது அனல் பறக்கம். ஆனால் அவரது மகன் விஜயபிரபாகரன் நிலைமை உணர்ந்து அதற்கேற்ற போல் குரலை உயர்த்த வேண்டிய இடத்தில் உயர்த்தியும், சமாதானமாக பேச வேண்டிய இடத்தில் சமாதானமாகவும் பேசிவிட்டு சென்றார். அதுமட்டும் இன்றி தான் எதற்கும் பயப்படுவது இல்லை எனவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி மேலிடம் கூறினால் போட்டியிட தயார் என்றும் கூறிவிட்டு இடத்தை காலி செய்தார் விஜயபிரபாகரன்.