கொரோனா பரிசோதனை என்ற பெயரில் தனியார் ஆய்வகங்கள் கொள்ளையோ கொள்ளை..! எக்கச்சக்க முறைகேடுகள்..!

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதற்காக தமிழகத்தில் 60 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இவற்றில் 17 தனியார் ஆய்வகங்கள், 43 அரசு ஆய்வகங்கள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்வதில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தனியார் ஆய்வங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களிடம் பேரம் பேசி அவர்களுக்கு தொற்று இல்லை என சான்றளிக்க ரூ.2500 முதல் ரூ.3ஆயிரம் பணம் பெற்று கொள்வதாக புகார்கள் வருகின்றன. 

மேலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அதிகப்படியான பரிசோதனை செய்து அதிக பணம் காப்பீட்டு நிறுவனங்களிடம் பெறும் முறைகேட்டிலும் தனியார் ஆய்வகங்கள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த புகாரின் அடிப்படையில் கோவையில் உள்ள4 தனியார்ஆய்வகங்களில் சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டதில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 ஆய்வகங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.  

இப்படி தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி பெற்று 60 ஆய்வகங்களில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பது, பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில் முறைகேடு. மத்திய அரசு அனுமதிக்காத பல தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை செய்வது என பல புகார்கள் பொதுமக்களிடம் வந்த வண்ணம் உள்ளன.

ஆகவே கொரோன பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஆய்வகங்கள் மட்டுமில்லாது தனியார் ஆய்வகங்களில் அனைத்திலும் உரிய வழிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என அரசு உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார்.