ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய் மற்றும் சேய் இறந்து போன சம்பவம் ஏர்வாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவித்த இளம் தாய் துடிதுடித்து பலி! குழந்தையும் அடுத்த நிமிடமே இறந்தது! நெல்லையில் அதிர வைக்கும் சம்பவம்!

நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடி என்னும் பகுதி அமைந்துள்ளது இதற்கு அருகில் திருக்குறுங்குடி என்னும் பகுதியில் உள்ள புது தெருவில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அகிலா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளாக குழந்தைக்காக அகிலா தவமாய் தவமிருந்து பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அகிலா கருவுற்றாள். நேற்று அகிலா பிரசவ வலியில் துடிதுடித்து உள்ளார் அருகில் இருந்த உறவினர்கள் அகிலாவை ஏர்வாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அகிலா சில மணிநேரத்தில் ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். துரதிஷ்டவசமாக சிறிது நேரத்தில் அகிலா துடிதுடித்து உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்தே செவிலியர்கள் மீளாத நிலையில் அகிலா உயிரிழந்த சில நொடிகளில் அந்த ஆண் குழந்தையும் உயிரிழந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் அகிலாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதாரத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அப்பகுதி காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அகிலா மற்றும் குழந்தையின் உடல்களை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கேயும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
விடிய விடிய போராட்டம் நடந்து கொண்டே இருந்தது. இன்று காலையில் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் அகிலாவின் தந்தையான சுந்தர்ராஜ் மற்றும் சில அரசியல் கட்சியினர் அளித்தனர். நெல்லை மாவட்டத்து கலெக்டர், கோரிக்கைகளை ஏற்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதற்குப் பிறகு போராட்டம் கலைந்து, உறவினர்கள் அகிலா மற்றும் குழந்தையின் உடலை வாங்கிச் சென்றனர். இந்தத் துயரச்சம்பவத்தினால் ஏர்வாடியில் இன்று மதியம் வரை பரபரப்பு நிலவியது.