இந்த மாதத்தின் பிரதோஷங்களுக்கு என்ன சிறப்பு தெரியுமா?

மார்கழி மாதம் என்பது சைவ மற்றும் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாதமாகும்.


மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல இன்பமான நிகழ்வுகள் உண்டாகும்.

இந்த மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன? என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும்.

புதன்கிழமையில் வரும் பிரதோஷம் 'புதவாரப்பிரதோஷம்" ஆகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும். சுபிட்சம் உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்குச் சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம்.

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம்.

பின் அருகம் புல்,பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.