திருப்பதி பாலாஜிக்கு இங்கேயும் ஒரு கோயில் உண்டு தெரியுமா?

திருப்பதி பாலாஜி கோயில் கௌஹாத்தி நகரத்தின் அற்புதமான கோயிலாகும். இந்த சன்னதி வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்து யாத்ரீகர்களுக்கு மிகவும் புனித இடமாக கருதப்படுகிறது.


காஞ்சி காமகோடி பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவில் பல இடங்களில் திக்விஜயம் செய்தவர். அவருடைய கருணையினால் அஸ்ஸாம் தலைநகர் கௌஹாத்தியில் மிகப் பெரிய கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. மேலும் அங்கு நம்மவர்களின் ஒரு கோவிலும் நிறுவப்பட வேண்டும் என்ற முறையில் ஸ்ரீ பாலாஜி மந்திர் நிறுவப்பட்டது.

காஞ்சி மடத்தின் அன்பர்களின் முயற்சியால் அரசாங்கம் அளித்த பரந்த நிலப்பரப்பில் பூர்வ திருப்பதி பாலாஜி மந்திர் கம்பீரமாக எழுந்து, அங்கிருக்கும் மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் மிகப் பிரபலமாக விளங்குகிறது.

திருமலையப்பன் எங்கே எழுந்தருளினாலும் ஆயிரக்கணக்கில் மக்களை ஈர்க்கும் அருள் வாய்ந்தவர். இங்கேயும் அப்படித்தான். தினந்தோறும் பக்தர்களின் வருகை இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமையானால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிகிறார்கள். முன்பு யாருமே வராத மலைக் காட்டுப் பிரதேசமாக இருந்த அப்பகுதியில் இப்பொழுது பல பள்ளிகள், தொழிற்சாலைகள் எல்லாம் பாலாஜியின் மகிமை.

கோயிலே அத்தனை அழகாக அமைந்துள்ளது. முழுமையும் வெள்ளைக் கற்களால் அமைக்கப்பட்ட கோயில். சுற்றிலும் செடிகளும், புதர்களும், நந்தவனமாக பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இக்கோயிலின் கோபுரம் 70 அடி உயரம் உடையது. தென்னிந்திய கோயில் போலவே இங்கும் மஹா மண்டபம், அர்த்த மண்டபம் உள்ளது.

இங்குள்ள மூலவர் சிலை 4 டன் எடையுள்ள ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் விநாயகர், மூலவர் பாலாஜி, பத்மாவதி தாயார், கருடாழ்வார், துர்க்கை என ஒவ்வொரு மூர்த்தமும் மிக அற்புதமாக எழுந்தருளியுள்ளன. அவர்களுக்குச் செய்துள்ள அலங்காரத்தில் பக்தியும் சிரத்தையும் கலந்துள்ளது.

பாலாஜி மந்திரின் டிரஸ்டிகள் குழு என்று இருந்தாலும் துணைத் தலைவராக இருக்கும் முத்துஸ்வாமியும், மீரா முத்துஸ்வாமியும் அங்கேயே தங்கியிருந்து கோயிலை மிகச் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்.