சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது.
அற்புதம் நிறைந்த மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் பூஜைகளும் அற்புதமானது தான்!
அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இக்கோயில் அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக மதுரை மீனாட்சி திகழ்கிறாள்.
மற்ற கோயில்களில் எல்லாம் ஆறு காலம் ஆறு பூஜைகள் என்றால் மதுரையில் மீனாக்ஷி அம்மனுக்கு எட்டுகால பூஜை. ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.
காலை 5 மணி முதல் 6 மணி வரை திருவனந்தல் பூஜை, காலை 6 மணி முதல் 7 மணி வரை விளா பூஜை, காலை 7.30 மணி முதல் 9 மணி வரை சந்தி பூஜை, காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை திரிகால சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சாயரட்சை பூஜை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை அர்த்த ஜாம பூஜை, இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை பள்ளியறை பூஜை.
இந்த எட்டுகாலங்களில் முறையே மஹா ஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும்.
அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது. மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்று அலங்காரங்கள்.
இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.