அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் பொங்கல் உற்சாகம் ஆரம்பம்.

தை பொங்கல் தினத்தை முன்னிட்டு ரேஷன் கார்டுக்கு 2,500 ரூபாய் வழங்கி சிறப்பித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் மனநிலையில் உள்ளனர்.


இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், தமிழர்களின் கலாசார போட்டியான ஜல்லிக்கட்டுக்கும் இந்த கொரோனா காலத்தில் விடிவுகாலம் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. எனவே, ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் 16-ந்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிடுவதாகத் தெரிவித்தார்.