பாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..? தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அவுட்..?

தி.மு.க. கூட்டணியில் எந்த நேரமும் கழட்டிவிடப் படலாம் என்ற நிலையில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அது புதுவையில் உச்சகட்டத்துக்குப் போய்விட்டது. ஆம், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை அறிவித்து விட்டதாக கூறப்படுவதால், கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது.


தி.மு.க.வின் மூன்று அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், நாஜும் ஆகியோர் புதுச்சேரி காங்கிரசோடு கூட்டணி வேண்டாம் என்று தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனாலும், நாராயணசாமி அவ்வப்போது வந்து ஸ்டாலினை சமாதானப்படுத்தி விடுவதால், இதுவரை பிரச்னை எதுவும் வெளியே வரவில்லை.

சமீபத்தில் புதுவை அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டது. எந்த நேரத்திலும் ஆட்சிக் கப்பல் முழுகப் போகிறது என்பதுதான் நிலைமை. எந்த நேரத்திலும் ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு உண்டு என்றே சொல்லப்படுகிறது.

ஆக, இந்த நிலையில், ஆட்சியை தக்கவைக்கத் தெரியாத காங்கிரஸ் கட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தி.மு.க. தலைமையில் தனி அணி அமைக்க முற்பட்டுள்ளனர். இதையடுத்தே ஜெகத் ரட்சகனை புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக இருந்து தேர்தலை நடத்தும்படி கட்டளை போட்டிருக்கிறாராம்.

இதை அறிந்ததும் பதறிப்போன காங்கிரஸ் டெல்லி தலைமை, கே.எஸ்.அழகிரியிடம் சொல்லி ஸ்டாலினிடம் சமாதானம் பேசும்படி கூறியிருக்கிறார்கள்.

ஆனால், தி.மு.க.வினரோ உடைஞ்சது உடைஞ்சதுதான் என்று இருக்கிறார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்.