தமிழிசை மீது கொலைவெறியில் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன் மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொலைவெறியில் இருக்கிறார். எல்லாம் தொகுதி பஞ்சாயத்துத்தான்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் நின்று வெற்றிபெற்றதால் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அடுத்த முறையும் அதே தொகுதியில் நின்று எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறார். ஆனால் அவரது ஆசையில் மண்ணள்ளிப் போடும் வேலையில் ஈடுபடுகிறாராம் தமிழிசை. அதனால் ஒருவருக்கொருவர் முட்டி மோதும் நிலைமை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பொன்னாரும் தமிழிசையும் ஒருவரையொருவர் கால் வாரி விட்டுள்ளனர். இப்போது மோதல் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. எப்படியும் தமிழகத்தில் தாமரை மலரப்போவதில்லை என்பது தமிழிசைக்குத் தெரியும். அதனால் தானும் எம்.பி. தேர்தலில் நின்று மத்திய அமைச்சர் ஆகவேண்டும் என்று அவருக்கு ஆசை வந்திருக்கிறது. அதனால் எந்தத் தொகுதி பாதுகாப்பானது என்று தேடிப்பார்க்க, கன்னியாகுமரிதான் கண்ணில் பட்டிருக்கிறது. உடனே பா.ஜ.க. மேலிடத்துக்கு தன்னுடைய ஆசையை சொல்லிவிட்டாராம். 

பொன்னாருக்கு  வேறு ஏதேனும் தொகுதியைக் கொடுத்துவிட்டு, எனக்கு கன்னியாகுமரியை ஒதுக்குங்கள். அங்குதான் எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மேலிடத்துக்கு வந்த தகவலை பொன்னாருக்குத் தெரிவிக்கப்பட, கோபத்தில் கண் சிவந்துவிட்டாராம். ஆனாலும் தமிழிசை விடுவதாக இல்லை. மேலிடத்தில் பொன்னார் பற்றி நிறையவே குறைகள் கூறிவருகிறாராம். நாலு வழி சாலை விவகாரத்தில் பொன்னார் மீது 2,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு இருப்பதையும் மேலிடத்துக்கு பாஸ் செய்திருக்கிறார்.

இந்த விவகாரம் தெரியவந்ததில் இருந்து தமிழிசையை தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாராம். நாடார் சமூகத்தினர் ஏற்கெனவே பாஜ.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதால் வேறு ஒரு சாதி தலைவர் போட்டால்தான் தமிழக பா.ஜ.க. வளர்ச்சி அடையும் என்று காரணம் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். மருத்துவக்கல்லூரி துணைவேந்தர் நியமனத்தில் தமிழிசை கணவருக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இதனை தட்டிக் கழித்தவர் பொன்னார் என்றுதான் தமிழிசை நம்புகிறார். ஏனென்றால் முதல்வர் எடப்பாடியை சந்தித்து கவர்னருக்கு அனுப்பும் பட்டியலில், செளந்தர்ராஜன் பெயரும் இருப்பது போன்று பார்த்துக்கொண்டார். ஆனால், பட்டியலில் அவர் பெயர் போகவில்லை. அதற்கு பொன்னார் செய்த உள்குத்துதான் காரணம் என்று நினைக்கிறார்.

அதனால் கன்னியாகுமரிக்காக பொன்னாரும் தமிழிசையும் முட்டி மோதத் தொடங்கியிருக்கிறார்கள். யாருக்கு வெற்றி என்பதை விரைவில் பார்க்கலாம்.