உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த அவரின் மகனுக்கு போலீசார் ஒருவர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாப்பாட்டுக்கே வழி இல்லை! அப்பா உடலை எப்படி அடக்கம் செய்றது! தவித்த மகன்! நெகிழ வைத்த போலீஸ்!

கடந்த 26ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 50 வயதான நபர் ஒருவர் மங்கிய விழுந்தார். தகவலறிந்த கோயம்பேடு போலீசார் வேகமாக சம்பவ இடத்திற்கு விரைந்து மயக்கம் அடைந்த நபரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் சங்கர் எனவும், இவரது மகன் கொடுங்கையூரில் தங்கி வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது.
இதை அறிந்த போலீசார் அவரது மகனுக்கு போன் செய்து உங்களுடைய அப்பா உயிரிழந்து விட்டார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது சடலம் உள்ளது என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டு பதறிய அவரது மகன் நந்தகுமார் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் . அதுமட்டுமல்லாமல் நான் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறேன். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாததால் வீடு வாடகை கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை. தினசரி சாப்பிடவே நான் மிகவும் திண்டாடி வருகிறேன். என்னுடைய தந்தையை அடக்கம் செய்ய என்னிடத்தில் பணம் இல்லை என்று கதறி அழுதுள்ளார்.
இறந்தவரின் மகனின் நிலைமையை புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் என்பவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் உள்ள அவரது தந்தையின் உடலை வாங்கிக்கொண்டு அவரது சொந்த செலவில் மகனின் முன்னிலையில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்து தந்தார். இன்ஸ்பெக்டரின் இந்த செயல் மனதை நெகிழ வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.