எங்கப்பா என் கூட உட்கார்ந்து சாப்பிட மாட்றார்..! பேசவும் முடியல! காவல் அதிகாரி மகள் வெளியிட்ட உருக்கமான தகவல்!

எங்க அப்பா கூட உட்கார்ந்து சாப்பிட முடியல அவர் கூட பேசவே முடியல என்று நெல்லை காவல் துறை அதிகாரி மகளின் உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்து கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை காப்பதற்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த ஊரடங்கில் மருத்துவர்கள் மற்றும் போலீஸ், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர் இரவு பகல் பாராமல் அயராது மக்களுக்காக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தடுக்க மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக கடைபிடிக்கவும், சமூக விலகலை முறையாக மக்கள் கையாளவும் காவல்துறையினரே இரவு பகல் பாராமல் உழைத்து அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சாகுல் அமீது என்பவர் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக கவசம் அளிப்பது மற்றும் உணவின்றி தவிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறார். 

இன்ஸ்பெக்டர் சாகுல் அமீதின் 9 வயது மகள் அப்ரின் ரைடா கொரோனா வைரஸ் தொற்று பற்றி வாட்ஸப்பில் பேசிய உருக்கமான பேச்சு வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி பேசிய சிறுமி அப்ரின் ரைடா இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, இத்தாலி போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எல்லோருமே இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காகவே நமது அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. டாக்டர், நர்ஸ், போலீஸ் போன்ற எல்லாரும் நமக்காகத்தான் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றால் 144 தடை உத்தரவை நாம் மதிக்க வேண்டும்.

எங்க அப்பாவும் ஒரு போலீஸ் அதிகாரி தான். தற்போது அவர் 144 தடை உத்தரவை மக்கள் முறையாக கையாள ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதால் எப்போதோ ஒரு முறை தான் வீட்டிற்கு வருகிறார். அப்படி வீட்டிற்கு வந்தாலும் தூரமாக இருந்துவிட்டு சாப்பிட்டு உடனடியாக சென்று விடுவார். அவர் அருகே இருந்து பேசக்கூட முடியவில்லை. உண்மையாகவே என் அப்பாவை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். 

ஆகையால் மக்கள் அனைவரும் அவர்கள் கஷ்டப்படுவதை நன்கு உணர்ந்து அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கொரோனாவை நாம் அழிக்க முடியும் ‌. வாழ்வது நாமாக இருக்கட்டும். வீழ்வது கொரோனாவாக இருக்கட்டும் என்று அவர் உணர்ச்சி பூர்வமாக பேசிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.