நான் செத்தால், என் மீது திமுக கொடி தான் போர்த்தப்பட வேண்டும்! 2001ல் ஜெயலலிதாவுக்கு பேராசிரியர் சொல்லி அனுப்பிய பதில்!

அதிமுகவில் வந்து இணைந்தால் திமுக பொதுச் செயலாளருக்கு நிகரான பதவி, பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி என்று ஆசை காட்டிய ஜெயலலிதாவுக்கு 2001ம் ஆண்டு பேராசிரியர் அன்பழகன் அளித்த பதில் அவர் எந்த அளவிற்கு திமுக மீது ஈர்ப்புடன் இருந்தவர் என்பதை தெரிவிக்கும் வகையில் அமைந்தது.


2001ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக 2வது முறையாக பதவி ஏற்ற சமயம் அது. தன்னை 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நீதிமன்றம், சிறைச்சாலை என்று அனுப்பிய கருணாநிதியை பழிவாங்க அவர் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தார். அதன் முதல்கட்டமாக கருணாநிதிக்கு நெருக்கமானவர்களை திமுகவில் இருந்து தூக்கி அதிமுகவில் இணைக்கும் நடவடிக்கை தீவிரமாகி இருந்தது.

அந்த கால கட்டத்தில் அப்போதைய சபாநாயகர் காளிமுத்து திமுக பொதுச் செயலாளரும் அப்போது எம்எல்ஏவாக இருந்தவருமான அன்பழகனை சந்தித்து பேசினார். மேலும் ஜெயலலிதா தங்களை அதிமுகவிற்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும், நீங்கள் சரி என்று சொன்னால் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை அதிமுகவில் சேரும்படி அழைப்பார் என்றும் அன்பழகனிடம் காளிமுத்து கூறியிருக்கிறார்.

மேலும் திமுக பொதுச் செயலாளர் என்கிற பதவிக்கு நிகரான பதவி அதிமுகவிலும் வழங்கப்படும், பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியையையும் தர ஜெயலலிதா தயாராக இருக்கிறார் என்று அன்பழகனுக்கு ஆசை காட்டப்பட்டது. ஆனால், தான் மறைந்தால் தன் மீது திமுக கொடி போர்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன், தனக்கு அழைப்பு விடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி என்று மட்டும் கூறிவிடுங்கள் என்று பதில் அளித்துள்ளார் அன்பழகன்.

இது நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று பேராசிரியர் மறைந்துள்ளார். தற்போது அவர் ஆசைப்பட்டபடி அவர் மீது திமுக கொடி போர்த்தப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.