சூரிய கிரகணம்! குழந்தைகளை மண்ணுக்குள் புதைத்த பெற்றோர்! பதற வைத்த சடங்கு!

சூரிய கிரகணத்தின் போது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கழுத்துவரை தரையில் புதைத்து வைத்திருந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் நிகழ்வு இன்று காலை 8 மணி முதல் 11:15 மணி வரை நிகழ்ந்துள்ளது. 

இந்நிலையில் சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது வெளியே வரக்கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் கடைபிடித்து வருவதை நாம் கண்டுள்ளோம். இதற்கும் மேலாக கர்நாடக மாநிலத்திலுள்ள கல்புர்கி மாவட்டத்திற்குட்பட்ட தேஜ்சுல்தான்பூர் எனும் இடத்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர் கழுத்து வரை மண்ணில் புதைத்திருந்தனர். இதன்மூலம் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் இருக்கும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் நாட்டில் மூட நம்பிக்கைகள் குறித்த பகுத்தறிவு விழிப்புணர்வு இன்னும் எட்ட வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.