மீண்டும் முதலமைச்சராக சிறப்பு யாகம்! காசியில் ஓபிஎஸ் குடும்பம்

இவரெல்லாம் எங்கே தாக்குப்பிடிக்கப் போகிறார் என்றுதான் எடப்பாடி பழனிசாமியை பற்றி அத்தனை பேரும் நினைத்தார்கள். கொங்கு அமைச்சர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் உதவியுடன் ஆட்சியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் எடப்பாடி.


கட்சியில் மட்டுமாவது தன்னுடைய பங்கு உறுதியாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார் ஓபன்னீர்செல்வம். ஆனால், இப்போது நடைபெற உள்ள நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வில் ஓ.பி.எஸ். பரிந்துரையை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், தானே முடிவெடுத்தார் எடப்பாடி.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு முத்துராமலிங்கத்தையும், சூலூர் தொகுதிக்கு செ.மா.வேலுசாமியையும் பன்னீர் முன்னிறுத்தினார். முத்துராமலிங்கத்துக்கு அமைச்சர் உதயகுமாரும், செமா.வேலுசாமிக்கு அமைச்சர் வீரமணியும் குறுக்கே நின்றார்கள். அதையும் மீறி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், அந்த அமைச்சர்கள் பரிந்துரைப்படியே சீட் கொடுக்கப்பட்டது.

அதனால் டென்ஷனான ஓ.பி.எஸ். எந்த கருத்தும் தெரிவிக்காமல் கட்சிக் கூட்டத்தில் இருந்து நழுவினார். அவருக்கு இப்போது இருக்கும் ஒரே பிடிமானம் நரேந்திர மோடி மட்டும்தான். தேனி தொகுதிக்கு வரவழைத்து தன்னுடைய செல்வாக்கை நிரூபித்துக்கொண்டார். அந்த அடிப்படையில் வாரணாசியில் மோடி கூட்டியிருக்கும் கூட்டணித்தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இரண்டு நாட்கள் முன்கூட்டியே கிளம்பினார்.

அதன்படி முதலில் காசிக்குப் போன ஓபிஎஸ். மூத்தோருக்கு செய்யவேண்டிய பூஜையை செய்து முடித்தார். இதையடுத்து, தன்னுடைய அரசியல் வெற்றிக்கும், தன்னுடைய மகன் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றிக்கும் சிறப்பு யாகம் ஏற்பாடு செய்திருக்கிறாராம். ஆட்சியைப் பிடிப்பதற்கு செய்யப்படும் இந்த யாகத்தால் பன்னீருக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

வாரணாசியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பேரணியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திர்நாத்தும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க விஷயம். அத்துடன் தமிழக விவகாரம் தொடர்பாக அமித் ஷாவுடன் பேசி முடித்திருக்கிறாராம் பன்னீர்.