நான் உங்களுடன் இருக்கிறேன்..! வாருங்கள் முன்னேறிச் செல்லலாம்..! இஸ்ரோ விஞ்ஞானிகளை நெகிழ வைத்த மோடி!

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பை இழந்த நிலையில் சோகத்தில் மூழ்கிய விஞ்ஞானிகளை பிரதமர் மோடி ஆரத்தழுவி ஆறுதல் கூறி ஆறுதல்படுத்தினார்.


சரியாக 1.55 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க நேரம் குறிக்கப்பட்டது. வெற்றிகரமாக லேண்டர் நிலவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் நிலவின் தரையில் இருந்து வெறும் 2.1 கிமீ தொலைவிற்கு சென்ற போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து பெங்களூரில் உள்ள செயற்கை கோள் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

சிறிது நேரம் தகவல் தொடர்பை பெற விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்தனர். இதனால் அந்த அறையே பரபரப்பாக காணப்பட்டது. பிறகு தகவல் தொடர்பை திரும்ப பெற முடியாத நிலையில் மீண்டும் அந்த அறை சோகமயமானது. இவை அனைத்தையும் பிரதமர் மோடி பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்து எழுந்த சென்ற இஸ்ரோ தலைவர் சிவன், மோடியிடம் சென்று லேண்டர் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக கூறினார். உடனடியாக அவரை தட்டிக் கொடுத்து அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று மோடி ஆறுதல் கூறினார். பிறகு அங்கிருந்து யாரும் எதிர்பாராத வகையில் மோடி நேராக விஞ்ஞானிகள் இருந்த அறைக்கு வந்தார்.

அங்கு விஞ்ஞானிகளிடம் பேசிய மோடி, வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். எப்படிப்பார்த்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்த தேசம் பெருமை கொள்கிறது. உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். நீங்கள் இந்த நாடு, அறிவியல், விண்வெளி போன்றவற்றுக்கு மகத்தான சேவை செய்துள்ளீர்கள்.

என்ன ஆனாலும் நான் உங்களுடன் இருக்கிறேன், துணிச்சலாக அடுத்து முன்னேறிச் செல்லுங்கள் என்று மோடி கூறினார். இதனை கேட்ட விஞ்ஞானிகள் நெகிழ்ந்து போயினர்.