தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் கீழே இயங்கி வரும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் (TNRERA) ஓபிஎஸ் அவர்களின் இரண்டு மகன்கள் இயக்குனர்களாக இருக்கும் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட் ஒன்றிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கும் செயல் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டும் விதமாக உள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
TN ரெராவில் ஓபிஎஸ் மகன்கள்! துணை முதலமைச்சரின் அதிகார துஷ்பிரயோகம்..! ஆதாரத்துடன் அம்பலமான பகீர் முறைகேடு!
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன்களான எம்பி ரவீந்திரநாத் குமார் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் விஜயந்த் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள். இந்நிலையில் இந்த நிறுவனம் தங்களது புராஜக்ட்களை பதிவு செய்து கொள்ள தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் (TNRERA )விடம் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் கீழே இயங்கி வரும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA )இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் வரும் TNRERA குழுமத்திடம் அவருடைய மகன்கள் இயக்கிவரும் நிறுவனத்தின் ப்ராஜெக்ட்களை பதிவு செய்துகொள்ள விண்ணப்பித்துள்ளது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உள்ளதாகவும், அதிலும் ஓபிஎஸ் மகன் அளித்துள்ள விண்ணப்பத்தில் தமது முகவரியாக அவருடைய தந்தைக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தின் முகவரியை குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நடத்திய தர்மயுத்தத்தை மறந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்ததையும் மறந்து வீட்டுவசதி துறை அமைச்சர் பதவியை புன்னகை மின்ன ஏற்றுக்கொண்டுதன் பின்னணி இதுதானா எனவும் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதலமைச்சர் ,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் கடமை உண்டு ஆகவே அவர் சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன் எனவும் மு க ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.