சசிகலா விடுதலைக்கு எதிர்ப்பு..! சசிகலாவை வெளியே விடாதீங்க… கர்நாடக அரசுக்கு திடீர் கடிதம்.

தமிழகத்தில் சசிகலா எப்போது வருவார் என்று பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நேரத்தில், காங்கிரஸை சேர்ந்த புள்ளி ஒருவர் சசிகலா விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

ஆனால், இதற்கு முன்னர் சசிகலா சிறையில் இருந்த நாட்கள், சலுகைகள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் காரணமாக சசிகலா ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரம் விடுதலையாவார் என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில்தான், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என்று அம்மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம், அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். சசிகலா விதிமுறைகளை மீறிச் சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக 2017ஆம் ஆண்டு அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்று எழுதியிருக்கிறார். மேலும், சிறையில் இருக்கும் சசிகலா எம்.ஜி.ரோடு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்ததை பார்த்ததாக முத்து மாணிக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், சசிகலாவால் அடுத்த வருடம் பிப்ரவரிக்குள் வெளியே வர முடியாது என்றே தெரிகிறது.