12 ஜோதிர்லிங்கத்தில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோயில் மகிமை தெரியுமா?

முக்தி தரும் நகரங்களில் ஏழில் காசி நகரமும் ஒன்று. ஒவ்வோர் இந்துவும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டும் என்று விரும்பும் தலம் காசி. இந்தியாவில் அமைந்திருக்கும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் காசியும் ஒன்று.


உலகின் மிகப் பழைமையான நகரம் என்று வாரணாசியைச் சொல்லலாம். 23,000 கோவில்களைக் கொண்ட பெருமை பெற்றது இந்த நகரம். கங்கையின் மேற்குக் கரையிலுள்ள இந்நகரில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில்  அமைந்திருப்பது நாம் அறிந்ததே. 

ஆகாயத்திலிருந்து மின்னல் போன்ற பளிச்சிடும் ஒளியானது இந்த நகரமெங்கும் விழுந்ததால், இந்த நகரம் காசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கையில் 84 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் 1. அசிசங்கம காட், 2. தசாசுவமேத காட், 3. மணிகர்ணிகா காட், 4. பஞ்சகங்கா காட், 5. வருணா சங்கம காட்  ஆகிய ஐந்தும் மிக சிறப்புடையவை.. 

காசி விஸ்வநாதர் ஆலயம்  இந்தூர் அரசி அகல்யாபாய் என்பவரால் 1776-ஆம் ஆண்டில் விரிவாகக் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். பின்னர் 1835-ல் ரஞ்சித்சிங் என்ற மன்னர் கோபுர உச்சிக்குத் தங்கத் தகடுகள் வேய்ந்தார். இவ்வாலயக் கருவறையில் தங்க மேடையில் லிங்கரூபியாக சிவபெருமான்  அருள்புரிகிறார். 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபெருமான் திருவுருவமும் இங்கு அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும்.

பல்வேறு சிறப்புகளைக்கொண்ட காசி விஸ்வநாதர் ஆலயம், அம்மனின் சக்தி பீடங்களில் ஒன்று. இங்கு அம்மன், `விசாலாட்சி' எனும் பெயரில் அருள்புரிகிறாள்.  மற்ற தலங்களில் இல்லாத வகையில் சிவபெருமான் இங்கு மகிழ்ச்சிப் பெருக்குடன் அருள்புரிவதால், 'ஆனந்த பவனம்' என்றும் இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்கள். கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது.  இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது.  

வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்பெறுவது  கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வைக் கங்கா ஆர்த்தி என்கின்றனர். கோவிலின் இடப்புறத்தில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும், வலப்புறத்தில் சனி பகவானின் சந்நிதியும் இடம் பெற்றுள்ளன. காசி விஸ்வநாதர் கோவிலை அடுத்து உலகத்திற்கு அன்னமிடும் அன்னபூரணி கோவிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சற்று தொலைவில் விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் விநாயகர் சாட்சி விநாயகராகக்காட்சி கொடுக்கிறார். இந்தக் காசி விஸ்வநாதர் கோவில் சிறிதாக அமைந்துள்ளதால் துந்திராஜ் கணேசர் கோவிலென்று அழைக்கப்படுகிறது. 

வாரணாசியில் இடம்பெற்றுள்ள தஸ்வாஷ்வமேத குளத்தில் மக்கள் நீராடிச் செல்லுவது வழக்கமாகும். இந்தக் குளத்தில் பிரம்மதேவன் பத்து குதிரைகளைப் பலி கொடுத்து மாபெரும் யாகத்தைச் செய்தார் என்று சிவபுராணம் சொல்லுகிறது. சிவபெருமான் காதில் அணியும் குண்டலம் இந்தக் குளத்தையொட்டி இடம்பெற்றுள்ள கிணற்றில் விழுந்ததால், இந்தக் கிணற்றை மணிகர்ணிகா கிணறு என்று அழைக்கின்றனர். 

மகாவிஷ்ணு தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் இந்தக் கிணற்றைத் தோண்டி உருவாக்கினார் என்று கூறுவர். இந்தக் கிணற்றின் வடக்குப்புறச் சுவர்களில் மகாவிஷ்ணுவின் சரணங்கள் பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மகாவிஷ்ணுவிற்கென்று தனியாக பிந்து மாதவர் கோவில் வாரணாசியில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலருகே பஞ்சகங்கா குளம் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் வாரணா நதி கங்கையோடு கலக்கின்றது. மகாவிஷ்ணு வாரணாசிக்கு வந்தபோது, இந்த இரண்டு நதிகள் கூடுமிடத்தில் முதன் முதலாகத் தன்னுடைய பாதங்களை வைத்தாரென்று புராணங்கள் சொல்லுகின்றன. இத்தகைய பெருமைபெற்ற அந்த இடத்தில் மகாவிஷ்ணுவிற்கென்று ஆதிகேசவர் கோவில் அமைக்கப் பெற்றிருப்பதும் சிறப்பானது. 

இந்தக் கோவிலை அடுத்து தெற்குத் திசையில் துர்காதேவி கோவிலைப் பார்க்கலாம். காசியில் மரண மடைந்தால் அந்த உயிர் மோட்சம் பெறும் என்பது இந்துமத நம்பிக்கை.