மு.க. ஸ்டாலினின் ஒன்றினைவோம் வா எஃபெக்ட்! 3வது திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


தற்போதைய நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டில் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் எம்எல்ஏ ஆகியோரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவை சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பணியாற்றிய செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு என்பவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்பது இன்று காலை கண்டறியப்பட்டது. திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு மருத்துவர் என்பதால் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பாதுகாப்பாக பணியாற்றிய போதும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்களை வழங்கி வந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.