ஓணம் பண்டிகையின் அற்புதம் தெரியுமா? கேரளத்தின் அறுவடை திருவிழா!

தமிழர்களின் மனம் கவர்ந்த பண்டிகையான பொங்கலை போல் கேரளாவில் அனைவரும் இணைந்து கொண்டாடும் விழா திருவோண பண்டிகையாகும்.


ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்படும்.  இந்த ஆண்டு 11.9.2019 அன்று கொண்டாடப்படும். 

திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலய அர்த்தஜாம பூஜை முடித்து, நடை சாத்தப்பட்டிருந்தது. அப்போது கருவறையில் எரிந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. விளக்கின் நெய்யைக் குடிக்க வந்த எலி ஒன்றின் மூக்கு பட்டு, விளக்கு திரி தூண்டப்பட்டது. இதனால் விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. விளக்கு அணையாமல் இருக்கச் செய்த எலியை, அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறக்க, ஈசன் அருள்புரிந்தார்.  

சிவபெருமானின் அருளைப் பெற்ற எலி, மறு பிறவியில் அசுர குலத்தில் ‘பலி’ என்ற பெயரில் மன்னராகி, கேரளாவை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். தனது ஆற்றலால், தேவர்களைக்கூட பலி மன்னர் தோற்கடித்தார். இதனால் அவர் மகாபலி சக்கரவர்த்தி என்று பெயர்பெற்றார். அவர் அஸ்வமேத யாகம் செய்ய முயன்றபோது, தேவர்களின் நலன் கருதி வாமனராக வந்த திருமால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவரை ஆட்கொண்டார். 

மகாபலியை, வாமனர் ஆட்கொண்ட தினம் ஆவணி மாதம் திருவோணம் ஆகும். அன்றைய தினம் மகாபலி மன்னன், தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு வருவதாக ஐதீகம். இதை நினைவு கூறும் வகையிலும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் எந்த மூலைக்கு சென்ற மலையாளிகளும், திருவோண திருநாளில் கேரளம் வருவதன் காரணம் இதுவேயாகும். 

மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்து மகிழ்வர். எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று மாலை கேரளாவில் ‘செண்டை’ என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பாம்பு போன்ற நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.

ஓண நாளன்று ஓணசத்யா என்ற 64 வகையான உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், பருப்பு பாயசம், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். 

பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பிக்கின்றனர். முன் காலத்தில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லப்படும் தூய்மை யான வெண்மை நிற ஆடைகளை மட்டுமே அன்றைய தினத்தில் உடுத்துவார்கள். மேலும் பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பல வகை பூக்களினால் அழகு கோலங்கள் இட்டு ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த கோலங்களில் அத்தப்பூ இடம்பெறுவதை சிறப்பாக கருதுவர்.

பூக்கோலத்தில் முதல்நாள் ஒரேவகையான பூக்கள், இரண்டாம் நாள் இருவகையான பூக்கள் என தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் கோலத்தை அழகு செய்வர்.  நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும், இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே பூக்கோலத்தின் நோக்கம்.