படித்து முடிக்காமலே பட்டத்தை சேர்த்துக்கொள்ளுவது போன்று, தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே, தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் போட்ட கல்வெட்டு திறக்கப்பட்ட விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
மகன் எம்பியான கல்வெட்டு! தேனி தேர்தல் செல்லாதா? சாகுவிடம் சமாதானம் பேசிய பன்னீர்!

ஏற்கெனவே தேனி தொகுதியில் ஓட்டுக்குப் பணம் வெளிப்படையாகக் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தங்கதமிழ்செல்வன் அலுவலகத்தில் இருந்து பணம் பிடிபட்டது. இதே காரணங்களுக்காக வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், தேனி தொகுதியில் மட்டும் எந்த பிரச்னையும் இன்றி தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து ஓட்டுப்பெட்டி மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதை அடுத்த பஞ்சாயத்தாக கல்வெட்டு மாறியிருக்கிறது. அதாவது தேனி மாவட்டம், குச்சனூரில் இருக்கும் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலயத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமாரின் பெயருக்கு முன்னே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று போடப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே இத்தனை உறுதியுடன் பெயர் போடவேண்டும் என்றால், ஓட்டுப்பெட்டிகள் மாற்றப்பட்டு தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும் என்று கடுமையான குற்றச்சாட்டும், தேனி தேர்தலை செல்லாது என அறிவிக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தமிழக தேர்தல் கமிஷனர் சாகுவைப் பார்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் பேசி முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், கல்வெட்டு பெரிய பிரச்னையாக தேர்தல் கமிஷன் எடுத்துக்கொள்ளாதாம். ஆனால், இந்த விவகாரத்தை தங்கதமிழ்செல்வனும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லையாம். ஆக, அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்.