இந்தியாவில் 80% பேரிடம் மொபைல் உள்ளது! ஆனால் 59% பெண்களுக்கு டாய்லெட் இல்லை!

இன்று பெண்கள் முன்னேறிவிட்டார்கள், நிறைய படிக்கிறார்கள், எல்லாமே தெரிந்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், வெளியே சொல்லமுடியாத வேதனையாக, கழிப்பறை வசதி இல்லாமல் அவஸ்தைப் படும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம் என்கிறது புள்ளிவிபரம்.


இந்தியாவில் 80% வீடுகளில் மின் வசதி இருக்கிறது. 90% வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. 80% இந்தியர்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியாவில் 59% வீடுகளில் கழிவறை வசதியில்லை. அதனால் சுமார் 60 கோடிப் பேர் - மொத்த மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்காக திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள்.

 

இந்தியா மட்டுமல்ல,  உலகம் முழுவதும் 250 கோடி மக்களுக்கு சரியான கழிவறை இல்லை என்கிறது ஐ.நா. இவர்களில் 110 கோடி பேர் கழிவறையை ஒருமுறை கூட கண்டதே இல்லையாம். திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

 

கழிவறை பயன்படுத்தாத மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் 70% வீடுகளில் கழிவறை இல்லை. குடிசைப்பகுதிகள், கடலோரக் குப்பங்கள், கிராமப்புறப் பகுதிகளின் படு மோசம். திறந்தவெளிகளும் புதர்க்காடுகளும் மர மறைப்புகளும் கடலோரங்களுமே இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்கான இடங்கள். 

 

கழிவறை என்பது வெறும் கழித்தலுக்கான இடம் மட்டுமே அல்ல. கண்ணியமான வாழ்க்கையின் தொடக்கமும் அதுதான். கழிவறை இன்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் சீண்டல்களையும் வல்லுறவுகளையும் எதிர்கொள்ளும் இடமாக இருப்பது அவர்கள் இயற்கை உபாதைகளை தீர்க்கச் செல்லும் போதுதான்.

 

திருப்பூர், சேலம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் டாய்லெட் இல்லை. மேல்தட்டு மக்களின் வீடுகளில் மட்டுமே அவ்வசதி இருக்கிறது. அரசு கட்டித்தரும் காலனி வீடுகளில் கட்டாயம் டாய்லெட் இருக்க வேண்டும். 

 

ஆம்பிளைகளுக்குப் பிரச்னையில்லை. பொம்பளைங்க பாடுதான் கஷ்டம். அதுவும் சின்னப்புள்ளைங்க ரொம்பவே சிரமப்படுதுங்க. காலையில சூரியன் கிளம்புறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சுப் போயிட்டு வந்துறணும். அதுக்கப்புறம் போகணும்னா ராவான பின்னாடிதான் முடியும். அதுலயும் திடீர்னு அந்தப் பக்கம் ஆம்பிளைங்க வந்துட்டா அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கணும். பகல்ல எல்லாத்தையும் அடக்கிக்கணும்.


ஆத்திரம் அவசரத்துக்குக் கூட எங்கேயும் ஒதுங்க முடியாது. ரொம்ப அவஸ்தைன்னா வீட்டுக்குப் பக்கத்துல எங்காவது போயிட்டு மண்ணைப் போட்டுத்தான் மூடணும். மாதாந்திர நேரத்துல பொம்பளப்புள்ளைங்க படுற கஷ்டம் கொஞ்சமில்லை. பல நேரங்கள்ல அவமானமா இருக்கும். இந்த மாதிரி இருட்டுல போகும்போது பாம்பு, பூரான்னு விஷங்க தீண்டிரும். அப்படி ஏகப்பட்ட புள்ளைக செத்துப் போயிருக்குக…”” என்று பெண்கள் வருத்தப்படுகிறார்கள்.

 

ஏன் பெண்களுக்கு கழிப்பறை வசதி செய்துதர ஆண் முன்வருவதில்லை என்பதற்கான காரணம் வெகு சிம்பிள். அவன் இயற்கை உபாதையை தெருவில், ரோட்டில் சாதாரணமாக கழித்துவிடுகிறான். அதனால் பெண்ணின் வேதனையை உணர்வதில்லை. 

மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கு முன் உங்கள் வீட்டுப் பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்க முறையான கழிப்பறை வசதி செய்து கொடுத்திருக்கிறீர்களா என்பதைப் பார்த்துவிடுங்கள்.