சசிகலாவுக்கு நோ ரைட்ஸ்... அ.தி.மு.க. கொடியைக் காப்பாற்றும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி.

புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவியால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க. கொடியும், இரட்டை இலையும் இப்போது தமிழக முதல்வர் எடப்பாடியார் கையில் பாதுகாப்பாக உள்ளது.


இந்த கொடியையும் இரட்டை இலையையும் எப்படியும் முடக்கிவிட வேண்டும் என்பதற்காகவே ஒரு கும்பல் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. குறிப்பாக நான்கு ஆண்டு தண்டனைக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்திருக்க்ம் சசிகலா, தன்னுடைய காரில் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு சென்றார். ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரை பயன்படுத்தியதோடு, அதில் அதிமுகவின் கொடியையும் கட்டியிருந்தார். இது தொடர்பாக அந்த நிமிடத்திலேயே அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவதற்கு எதிராக மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் காவல்துறை தலைமை இயக்குநரை நேற்று சந்தித்து புகார் அளித்தனர். அதில் ’அதிமுகவுக்கு உரிமைப் பொருளான கட்சிக் கொடியை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை தவிர, மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஆனால், சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது எங்கள் இயக்கக் கொடியை பயன்படுத்தினார். அதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை. அது தொடரக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி, நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த புகாரை அளித்தனர்.

 இது தொடர்பாக பேசும் அதிமுக நிர்வாகிகள், ’’ மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சீரிய தலைமையிலும், வழிகாட்டுதலிலும் லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பாலும் வியர்வையாலும் கட்டமைக்கப்பட்ட கட்சி அதிமுக. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அதிமுகவை ஒன்றுபடுத்தி வலிமை மிக்க இயக்கமாக தொடர்ந்து பீடு நடை போடச் செய்தார். அதேபோன்றுதான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடியும் செயல்பட்டு, இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து வருகிறார்.

ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக பிளவுபட்டு விடும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் எதிர்பார்த்து அரசியல் எதிரிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகளையெல்லாம் சாமர்த்தியமாக முறியடித்துக் காட்டினார். அவரது அந்த அபார திறமையினால் கட்சியின் ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டு அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது’’ என எடப்பாடியின் ஆளுமை திறனுக்கு பாராட்டு சான்றிதழ் வாசிக்கின்றனர்.

சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும், கட்சியில் இடமில்லை என்பதை தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அழுத்தம் திருத்தமாக உணர்த்தும் விதமாகவே எடப்பாடி இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அடையாளமான அண்ணா படம் பொறிக்கப்பட்ட கொடியைக் காக்க எடப்பாடி எந்த எல்லைக்கும் செல்வார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

முதல்வர் எடப்பாடி மட்டுமல்லாது மூத்த அமைச்சர்களுமே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். சசிகலா பக்கம் செல்லக்கூடும் என கூறப்பட்ட அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமிதான் நிரந்தர முதல்வர் என நடப்பு சட்டசபை கூட்டத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர்.