இந்தி திணிப்பு! கொதித்த தமிழகம்! சமாதானம் செய்ய தமிழில் ட்வீட் செய்த மத்திய அமைச்சர்கள்!

இந்தி திணிக்கப்படுவதாக ஸ்டாலின் உள்ளிட்டோர் செய்த பிரச்சாரத்தால் தமிழகம் கொதித்த நிலையில் சமாதானம் செய்ய மத்திய அமைச்சர்கள் இரண்டு பேர் தமிழில் ட்வீட் செய்துள்ளனர்.


இந்தி பேசாத மாநிலங்களில் 3வது மொழியாக பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை நேற்று வெளியானது. இதனை அடுத்து இதன் மூலமாக தமிழகத்தில் மீண்டும் இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முயல்வதாகவும், இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது.

ஸ்டாலின் தொடங்கி திருமாவளவன் வரை அனைத்து தலைவர்களும் புதிய கல்விக் கொள்கையின் வரைவுக்கு எதிராக குரல் எழுப்பினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவும் கூட தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் என்று உறுதிப்படுத்தியது.இருந்தாலும் கூட மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தமிழர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், தமிழக மக்களின் ஒப்புதல் இல்லாமல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வராது என்று தெரிவித்துள்ளார். https://twitter.com/nsitharaman/status/1135128303185027072

இதே போல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், மத்திய அரசு அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தி நிச்சயமாக தமிழகத்தில் திணிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். https://twitter.com/DrSJaishankar/status/1135151542741241856

மத்திய அரசுக்கு எதிராக கொதித்துப் போயுள்ள தமிழர்களை தமிழக அமைச்சர்களை வைத்தே சமாதானம் செய்யவே பாஜக இது போன்ற ட்வீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.