கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கு அடுத்து வரும் மூன்று முதல் நான்கு வாரங்கள் நமக்கு மிக முக்கியமானவை என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
அடுத்து வரும் 4 வாரங்கள் மிக முக்கியமானவை.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!

உலகையே உலுக்கி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சீனாவிலுள்ள ஊகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த வைரஸ் தொற்று உலகெங்கிலும் பல நாடுகளில் தீவிரமாக பரவி தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நம்முடைய இந்திய நாடும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முடியவில்லை.
இதுவரை நம் நாட்டில் 5 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நம்முடைய இந்திய அரசு பலவித முயற்சிகளை கையாண்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது வீடுகளிலிருந்து முடிந்தவரை வேலை செய்யவும் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என உலக சுகாதார நிலையம் கூறியிருக்கிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நம் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்குமாறு கூறி இருக்கிறார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வரிடம் பேசிய நரேந்திர மோடி அவர்கள் அடுத்து வரும் மூன்று முதல் நான்கு வாரங்கள் நமக்கு மிக முக்கியமானவை என்றும் அந்த நாட்களில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய மோடி அவர்கள் சோஷியல் டிஸ்டன்ஸிங் என அழைக்கப்படும் சமூக விலகல் பழக்கத்தை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கவும் கைகுலுக்கவும் கூடாது எனவும் அவர் கூறியிருக்கிறார் . இதன் மூலம் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும் நம்முடைய நாட்டையும் காப்பாற்றிக்கொள்ள முடியும் எனவும் இதற்கு திறன்பட செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.