புது மனைவியின் மண்டையை உடைத்து கொலை செய்த கொடூர கணவன்!

புது மனைவியை வரதட்சிணைக்காக மண்டையை உடைத்துக் கொன்ற கணவன் உடலை எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


காதலால் வழிபட வேண்டிய பெண்மையை வரதட்சிணைச் சந்தையில் இழிவுபடுத்தி பதம் பார்க்கும் அவலம் தொடரத்தான் செய்கிறது. காஸ்கஞ்ச் நகரைச் சேர்ந்தவன் ரோஹித்குமார். பரேலி மாவட்டம் ஜோகி நவாடா என்ற இடத்தைச் சேர்ந்த பெண்ணைத் அண்மையில் திருமணம் செய்தான்.  

   இந்நிலையில் தனது தந்தை வீட்டில் இருந்த மனைவியை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்ட அவன், கோடல் நக்லா என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் பின்புறம் மனித நடமாட்டமில்லாத பகுதிக்கு வரவழைத்தான்.  அங்கு மனைவியின் மண்டையில் கனமான பொருளால் தாக்கி உடைத்துக் கொன்றான் அந்தக் கொடூரன்.

    பின்னர் உடலை எரித்ததோடு எஞ்சிய உடல் பாகங்களை புதைத்த அவன் அதன் பிறகு தனது செல்ஃபோனை அணைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் தந்தை சந்திரபால் தனது மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

    தன்னைக் காண தனது மகள் தன் வீட்டுக்கு வந்திருந்ததாகவும் அப்போது தனது மருமகன் தொலைபேசியில் அழைத்ததையடுத்து புறப்பட்டுச் சென்ற தனது மகளை காணவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன் பேரில் ரோஹித் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவன் முன்னுக்குப் பின் முரணாக உளறினான்.

   இதன் பிறகு அவனிடம் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தினர். அப்போது திருமணத்தின் போது பெண்வீட்டார் தனது குடும்பத்தினருக்கு உரிய முறையில் மரியாதை தரவில்லை என்றான். மேலும் தான் எதிர்பார்த்த வரதட்சிணை கிடைக்கவில்லை என்றும் அவன் கூறினான்.

   இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நேரம் பார்த்து தனது மனைவியை தனியாக அழைத்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டான். அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.