திருமணமாகி மூன்றே நாள்..! தனி அறையில் சடலமாக தொங்கிய புதுமணப்பெண்! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

திருமணமான 3 நாட்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் சக்கரமல்லூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளின் பெயர் திவ்யா. திவ்யாவின் வயது 21. கடந்த சில மாதங்களாக திவ்யாவுக்கு திருமண வரன் பார்த்து வந்தனர். 

அதன்படி சென்னை புறநகரான திருநின்றவூரை சேர்ந்த ராகவேந்திரன் என்று இளைஞருடன் திவ்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராகவேந்திரனின் வயது 25. இருவருக்கும் இந்த மாதம் 7-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றுள்ளது. 2 நாட்கள் கழித்து விருந்துக்காக தாய் வீட்டிற்கு கணவருடன் திவ்யா வந்திருந்தார்.

அப்பொழுது சகஜமாக அனைவரிடமும் திவ்யா பேசியுள்ளார். சிறிது நேரம் கழித்து ஓய்வு எடுக்கப்போவதாக கூறிவிட்டு திவ்யா தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார். நெடுநேரமாகியும் அவர் அறையைவிட்டு வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். கதவை தட்டிப் பார்த்தபோதும் எந்தவித பதிலும் கிடைக்காததால், கதவை உடைக்க முடிவெடுத்தனர்.

கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது திவ்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திவ்யாவை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் திவ்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

உடனடியாக திவ்யாவின் பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணமான 3 நாட்களுக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.