ஒன்றரை மாத குழந்தையின் தொடையில் ஒன்றரை மாதமாக சிக்கியிருந்த ஊசி..! வீக்கம் குறையாமல் தொடர் கதறல்..! பிறகு?

கைக்குழந்தையின் தொடையில் 2.5 மாதங்களாக ஊசி இருந்த சம்பவமானது மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள மரவனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. தாமரைச்செல்வியின் வயது 23. லால்குடியை சேர்ந்த பிச்சாண்டவர் என்ற 33 வயது நபருடன் தாமரைச்செல்விக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தாமரைச்செல்வி சென்ற ஆண்டு கருவுற்றார். இந்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி பிரசவ வலிக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் தாமரைச்செல்வி அனுமதிக்கப்பட்டார். பிரசவம் வெற்றிகாரமாக முடிந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் சிகிச்சை முடிந்து குழந்தையுடன் தாமரைச்செல்வி வீடு திரும்பியுள்ளார். குழந்தை பிறந்த மறுநாள் அன்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் குழந்தை அடுத்த சில நாட்களில் காய்ச்சலாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தது. உடனடியாக பெற்றோர் குழந்தையை மரவனூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் ஏதோ வீக்கமிருப்பதாக கூறியுள்ளனர். பெரும்பாலான மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், செவிலியர்கள் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைக்குமாறு தாமரைச்செல்வியிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். 

45 நாட்களுக்கு பிறகு மற்றொரு தொடையில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போதும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் பெற்றோர் வீக்கமாக இருந்த தொடையை சற்று அழுத்தி பார்த்துள்ளனர். அப்போது ஊசி போன்று ஏதோ தென்படுவதை பெற்றோர் உணர்ந்துள்ளனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் தொடைக்குள் சென்றிருந்த ஊசியை வெளியே எடுத்தனர்.

பின்னர் அந்த ஊசியை ஒரு டப்பாவுக்குள் போட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று மருத்துவ அதிகாரியிடம் முறையிட்டனர். இதனை தெரிந்துகொண்ட மணப்பாறை காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சமாதான பேச்சில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் உறவினர்கள் நிச்சயமாக ஊசி போட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவமானது மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.